மரணத்துக்கு ஏதுவான பாவம் - 1 யோவான் 5:16-17 | ஹென்றி மேஹன் விளக்கவுரை

மரணத்துக்கு ஏதுவான பாவம் - விசுவாச துரோகம்

1 யோவான் 5:16-21

16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 

17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.

வ. 16. யோவான் ஜெபத்தைக் குறித்து எழுதி, விசுவாசிகள் ஏறெடுக்கும் ஜெபத்தை தேவன் கேட்பார் என்றும், அவருடைய சித்தத்தின்படி கேட்கப்படும் விண்ணப்பங்களுக்கு பதில் அருளுவார் என்றும் விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார். கிருபாசனத்தண்டையில் பிரியமுள்ளவர்கள் அதை மற்றவர்களுக்காக பயன்படுத்த வேண்டும், முக்கியமாக பலவீனமான சகோதரர்களுக்காகவும், பாவத்தால் விழுங்கப்பட்டவர்களுக்காகவும். தோலைந்துபோனவர்கள் தேவனால் இரட்சிப்படையும்படியும் ஜெபிக்க நாம் ஊக்குவிக்கப்படுகிறோம் (ரோமர் 10:1); ஆனால் இந்த வசனம் (சபையில் அங்கத்துவம் வகிக்கிற) ஒரு சகோதரன் பாவத்தில் இருப்பான் என்றால் (வார்த்தையிலோ, சிந்தையிலோ, செயலிலோ) அல்லது பாவத்தில் விழுந்தால், அவனுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்று போதிக்கிறது. தேவன் அந்த ஜெபத்தைக் கேட்டு அந்த சகோதரனுக்கு ஜீவன் அருளுவார். (ஜீவன் அருளுவார் என்பதன் பொருள் - ஆருதலை, சமாதானத்தை, துக்கம் மனக்கசப்பு ஆகியவற்றால் அமிழ்ந்துபோகாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அருளுவார்). நிச்சயமாக அந்த சகோதரன் பாவத்தில் நிலைத்திருப்பதில்லை; அவன் பாவத்தை உணர்ந்தவனாக, பாவத்தால் வெட்கி வருந்துகிறவனாக, பாவத்தை கைவிடுகிறவனாக இருப்பான். 'மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு' என்பது எல்லா பாவமும் மரணத்துக்கு ஏதுவாக இருப்பது உண்மையாயினும் விதிவிலக்காக இந்த குறிப்பிட்ட பாவம் நிச்சயம் மரணத்துக்கு வழிவகுக்கும் என்ற பொருளை தருகிறது. ஜான் கில் சொல்கிறார், 'இந்த மரணத்துக்கு ஏதுவான பாவமானது பரிசுத்த ஆவிக்கு விரோதமாக செய்யும் பாவம் - மனப்பூர்வமாக செய்கிற பாவம், நடைமுறையில் செய்யும் பாவம் அல்ல, உபதேச ரீதியாக செய்யும் பாவம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் சத்தியத்தை நிராகரிப்பது என்ற பாவம்.' ஜான் கெல்வின் சொல்கிறார், 'இந்த மரணத்துக்கு ஏதுவான பாவமானது பகுதி வீழ்ச்சியோ, ஒரு கட்டளையை மீறுவதோ அல்ல. மாறாக விசுவாச துரோகம் என்ற பாவம். விசுவாச துரோகம் என்கிற பாவத்தின்மூலம் மனிதன் தன்னை கிறிஸ்துவிடம் இருந்து அந்நியப்படுத்தி, சாத்தானுக்கு சரணடைகிறான். எந்த ஒரு பெயர் கிறிஸ்தவரும் விசுவாச துரோகம் என்ற பாவத்தை செய்துவிட்டார் என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிடக்கூடாது. அன்பு நம்மை நல்லதாகவே நம்ப வைக்கும். ஆனால், ஒருவன் பிரிந்து சென்றுவிட்டால், தேவனின் நீதியோடு நாம் போராட வேண்டாம் (அ) அவரை விட அதிக இரக்க குணத்தோடு இருக்க முயல வேண்டாம்!' விசுவாச துரோகம் செய்த ஒருவருக்காக நாம் ஜெபிக்க வேண்டுவதில்லை. 


வ. 17. ஆநீதியெல்லாம் தேவனுக்கு எதிரான பாவந்தான். அவை மரணத்துக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. இருந்தபோதும் எல்லா அநீதியும் மரணத்துக்கு வழிவகுப்பதில்லை. காரணம், முதலாவது கிருபை, இரண்டாவது, நம்மை இலவசமாக நீதிமான்களாக்கிய கிறிஸ்துவின் இரத்தம், மூன்றாவதாக, தேவனுடைய இரக்கம் இருப்பதால் நாம் மீட்படைகிறோம். தாவீதின் பாவம், யாக்கோபின் பாவம், பேதுருவின் பாவம் ஆகியவை மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல. அவர்கள் ஜீவனுக்கு ஏதுவான மனந்திரும்புதலையுடையவர்களாய் இருந்தார்கள். மன்னிக்கிற கிருபை அவர்களுக்கு கிடைத்தது. பலவீனமான விசுவாசி ஒருவேலை முந்தைய வசனத்தை வாசித்து விரக்தியடையலாம். ஆகவேதான் யோவான் கூடுதலாக சொல்கிறார், 'மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு' என்று. (எபி 8:12, 1 யோவான் 1:9, 2:1)



கருத்துகள்