சங்கீதம் 2:1-6 | விளக்கவுரை

 சங்கீதம் 2:1 ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தை சிந்திப்பானேன்?


   ஜாதிகள் என்ற பதம்  பொதுவாக பூமியின் அனைத்து ஜனத்தையும் குறிப்பிடுவதாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் இஸ்ரவேல் மக்களை இங்கே குறிப்பிடுகிறது. தங்களின் முற்பிதாக்கள் காலாகாலங்களாக பயத்தோடும் பக்தியோடும் தொழுதுகொண்ட தேவனை மறந்து அவருக்கு விரோதமாகவே கொந்தளிக்கிறார்கள். ஆனபடியால் அவர்கள் அந்நியர்களாக எண்ணப்படுகிறார்கள். அவர்கள் உன்னதமான தேவனுக்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். நீதியும், பரிசுத்தமும், கிருபையும் மிகுந்த ராஜ்யத்துக்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். உலகிற்கு நன்மையை மாத்திரமே கொண்டுவருகிற ராஜ்யத்திற்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். வீழ்ச்சியுற்ற உலகிற்கு பரலோகத்தையே கொண்டு வருகிற ராஜ்யத்திற்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள். இவ்வளவு மேன்மையான ராஜ்யத்துக்கு விரோதமாக இவர்கள் கொந்தளிக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்களுடைய கொந்தளிப்பு கிறிஸ்துவின் ராஜ்யத்தை வீழ்த்தமுடியுமா? ஒருபோதும் முடியாது (மத் 16:18). பின்னை ஏன் இவர்கள் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு விரோதமாக கொந்தளிக்கிறார்கள் என்று ஆண்டவர் இங்கே கேள்வி எழுப்புகிறார். கிறிஸ்துவின் ராஜ்யம் மகிமையானது. கிறிஸ்துவின் ராஜ்யம் தோற்கப்படமுடியாத ஒன்று. கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு வெற்றி ஒன்றே இருதி. கிறிஸ்துவின் ராஜ்யம் உறுதியான பாறையாகிய கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு விரோதமாக கொந்தளிப்பதும், கலகம் செய்வதும் வீண். இவ்வுலகின் ராஜ்யங்களில், ஏதோ ஒரு நன்மையை பெரும்படி போராட்டம் நடத்துவது இயல்பு. ஆனால், இவர்களோ நீதியும், நன்மையும், பரிசுத்தமும், கிருபையும் மிகுந்த ராஜ்யத்துக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறார்கள். இப்படியாக இவர்கள் கலகம் செய்து தங்களுக்கு திரளான அழிவை சம்பாதித்துக்கொள்ளுகிறார்கள். நாய் எவ்வளவுதான் நிலவைப் பார்த்து குரைத்தாலும் நிலவு ஒளி வீசிக்கொண்டே தான் இருக்கும். 


சங்கீதம் 2:2 கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 


   கிறிஸ்துவின் ராஜ்யத்தை எதிர்க்கிற இவர்கள் தேவனையே எதிர்க்கிறார்கள். தேவனையும் தேவகுமாரனையும் ஒருமித்து எதிர்க்கிறார்கள். அவர்களுடைய பாவம் கிறிஸ்து தருகிற மேலான ஆசீர்வாதங்களை காணக்கூடாதபடி அவர்களுடைய கண்களை இருளடையச் செய்திருக்கிறது. இங்கே பாருங்கள், சாதாரன ஜாதிகள் மாத்திரம் அல்ல, ராஜாக்கள் அனைவரும் கிறிஸ்துவின் ராஜ்யத்தை எதிர்க்கிறார்கள். ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகிய கிறிஸ்துவை எதிர்க்க துணிகிறார்கள். அண்டசராசரத்தின் மீதும் ஆளுகை செய்கிற செங்கோலுடையவரை எதிர்க்கத் துணிகிறார்கள். அடுத்தபடியாக, "அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி" என்று வாசிக்கிறோம். பொதுவாக, வழக்கு மன்றத்தில் அதிகாரிகள் இருதரப்பினராக பிரிந்து மாற்றி மாற்றி சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதிகாரிகள் கொள்கை ரீதியாக பலதரப்பட்டவர்களாக பிரிந்துகிடப்பார்கள். ஆனால், கிறிஸ்துவின் ராஜ்யம் என்று வரும்பொழுது அவர்கள் ஒருமித்துக்கூடி (ஏகமாய் கூடி) தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் அழிவில்லா ராஜ்யத்தை அழிக்கும்படியாக ஆலோசனை பண்ணுகிறார்கள். (அப் 4:28)


சங்கீதம் 2:3 அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிருகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.


   கிறிஸ்துவின் சுவிசேஷேசம் மனிதர்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது. சுவிசேஷம் நம் முதுகில் சுமத்தப்பட்ட பாவ பாரத்தை கட்டவிழ்த்து கடலின் ஆழத்தில் போடுகிறது; மெய்யான விடுதலையைக் கொடுக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்கு அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்தைக் கொடுக்கிறது; சுயாதீனத்தை கொடுக்கிறது. கிறிஸ்துவின் நுகம் மிக மெதுவானதானதும், இலகுவானதாகவும் இருக்கிறது. பாவத்தின் கொடிய எடையின் அழுத்தத்தால் வருந்திக்கொண்டிருக்கும் ஆத்துமாவை விடுவிக்கிறது. பாவத்தினால் உண்டான உள்ளான காயங்களை கட்டும் மருந்தாக இருக்கிறது. ஆத்துமாவிற்கு ஆருதலையும் தேருதலையும் கொடுக்கிறதாக இருக்கிறது. ஆயினும், பூமியின் ஜாதிகளும், ஜனங்களும், ராஜாக்களும், அதிகாரிகளும் இந்த சுவிசேஷத்தை எதிர்க்கிறார்கள். இந்த சுவிசேஷத்திற்கு விரோதமாக கலகம் பண்ணுகிறார்கள். அவர்கள் பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைப்படுத்தப்பட்டு கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள். விடுதலை கொடுக்கிற நற்சுவிசேஷத்தை அவர்கள் கட்டுகள் என்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொடுக்க வல்லமையுள்ள சுவிசேஷத்தை கட்டுகளாக பாவித்து அதை அழிக்க கண்டனம் கட்டுகிறார்கள்.


சங்கீதம் 2:4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்: ஆண்டவர் அவர்களை இகழுவார்.


   ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்தவராக அவர்களைப் பார்த்து நகைக்கிறார், இகழுகிறார். பூமியின் ராஜாக்களும், அதிகாரிகளும் ஒருமித்து ஏகமாய் ஆலோசனை பண்ணி நித்திய ராஜாவை அழிக்க திட்டமிட்டு அவருக்கு விரோதமாக மரண தீர்ப்பை எழுதினார்கள். ஆனால், அவரோ தமது அநாதி சித்தத்தை அவர்களைக் கொண்டு நிறைவேற்றினார். சிலுவையில் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கொன்று வென்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால், தமது ஜனத்தை மீட்கும்படியாக தேவன் திட்டமிட்ட தமது சித்தத்தை அவர்கள் மூலமாக நிறைவேற்றினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிகார பலியினால் அநேகரைத் தமது மீட்பின் கரம்கொண்டு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்து கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இணைத்தார். கிறிஸ்துவின் ராஜ்யம் வளர்ச்சியடைந்துகொண்டும், விரிவடைந்துகொண்டும் செல்கிறது. இப்படியாக அவர்களுடைய நாசவேலையையும் தேவன் தமது ராஜ்யத்துக்கு சாதகமாக மாற்றினார். தேவன் தமது நோக்கத்தை, திட்டத்தை இவர்களின் இழிவான திட்டத்தின் மூலம் நிறைவேற்றி அவர்களை வெட்கி நான வைக்கிறார். தேவன் அவர்களைப் பார்த்து உண்மையில் சிரிக்கிறார், இகழுகிறார். (சங் 2:4; 59:8). 


சங்கீதம் 2:5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.


   அவர்கள் நீதியாக தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் நீதியும் பரிசுத்தமும் கிருபையும் நிறைந்த கிறிஸ்துவின் ராஜ்யத்தை எதிர்த்தார்கள். ஆகவே நீதியும் பரிசுத்தமும் கிருபையுமுள்ள தேவன் அவர்களை வெறுக்கிறார். தேவன் பாவத்தை மாத்திரமல்ல பாவிகளையும் வெறுக்கிறார். அப்படித்தான் வேதம் நமக்கு போதிக்கிறது (சங்கீதம் 7:11). தேவன் பாவியைத்தான் நரகத்தில் தள்ளுகிறார்; பாவத்தையல்ல. பூமியின் முதல் மனிதனாகிய ஆதாம் துவங்கி பூமியின் கடைசி மனிதன் வரை ஒரு மனிதனையும் கிறிஸ்துவுக்கு அப்பாற்பட்டு தேவன் நேசிப்பதில்லை. தேவன் ஒரு மனிதனை நேசிக்கிறார் என்றால் அவனை கிறிஸ்துவுக்குள்ளாக மாத்திரமே நேசிக்கிறார். அவருடைய ஸ்நேகம் கிறிஸ்துவுக்குள்ளாக மாத்திரமே அவருடைய பிள்ளைகள்மேல் அநாதியாய் பொழியப்படுகிறது. அது தேவனுடைய முடிவற்ற நித்திய மாறாத ஸ்நேகமாக இருக்கிறது. அவ்வாறே கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கு உட்படாதவர்கள்மேல், கிறிஸ்துவின் நற்சுவிசேஷத்தை வெறுக்கிறவர்கள்மேல் தேவனுடைய முடிவற்ற நித்திய மாறாத கோபம் குடிகொள்ளுகிறது. அவர்கள் அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்கள் என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 9:23).  கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாளில் அவர்களுக்கு நேரிடுவது சோதோம் கொமோராவின் நாட்களை விட பயங்கரமாக இருக்கும் (மத் 10:15). அங்கே அவர்கள்மேல் தேவனுடைய இரக்கம் இராது. தேவனுடைய கோபம் முழுவேகத்தோடு வானத்திலிருந்து இவர்கள்மேல் கொட்டப்படும். நாம் கிறிஸ்துவை நிராகரிப்போம் என்றால் நம்மைக் காப்பாற்ற வல்லவராகிய அவர் ஒருவருக்கு விரோதமாகவே பாவம் செய்கிறோம் என்று அர்த்தம். கிறிஸ்துவின் ராஜ்யத்தை நிராகரித்த ஒவ்வொருவரையும் அவர் சங்கரிப்பார். 


சங்கீதம் 2:6 நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

 

   ஆங்கில வேதாகமத்தில் இந்த வசனத்தை வாசிக்கும்போது "இருந்தபோதும் நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன்" என்று வாசிக்க முடிகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அரசாட்சிக்கு எதிராக அனைத்து வகையினரும் ஒருமித்து கூடி கருப்பு கொடியை பறக்க விடுகிறார்கள். பரிசுத்தமான தேவன் அவர்கள் மேல் ராஜாவாக இருப்பதை அவர்கள் விரும்புகிறதில்லை. வேதம் சொல்கிறது, பொல்லாங்கு செய்கிற எவனும் தன் பொல்லாத கிரியைகள் கண்டுபிடிக்கப்படும் என்பதை அறிந்து அந்த ஒளியினிடத்திற்கு வராதவனாயும், அந்த ஒளியை பகைக்கிறவனாயும் இருக்கிறான் என்று (யோவான் 3:20). இவ்வுலகமே அணிதிரண்டு வந்தபோதும் தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். மக்களின் ஓட்டு கிறிஸ்துவை ராஜாவாக்கவில்லை. மாறாக பரலோக பிதா தமது ஒரே பேறான குமாரனை ராஜாவாக ஏற்படுத்துகிறார். 

   நமது ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. கிறிஸ்துவை எந்த மனிதனும் தேர்ந்தெடுப்பதில்லை. மனிதனுடைய ஓட்டு எண்ணிக்கையால் அவர் ராஜாவாகவில்லை. கிறிஸ்துவின் ராஜ்யம் முடியாட்சி. அங்கே அவர் தான் தம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார் (யோவான் 15:16). அவருடைய ராஜ்யத்தில் மக்கள் அவருடைய சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  கிறிஸ்துவின் ராஜ்யத்தில் கர்த்தருடைய வேதமே முடிவும் முதலுமாக இருக்கிறது (யோவான் 12:48).

   இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் கிறிஸ்து இயேசு இவ்வுலகில் சிலுவையின்மூலம் அடைந்த மேன்மையை எடுத்தியம்புகிறது என்பதை மனதில் வையுங்கள். ஏதோ பின் நாட்களில் நடக்கப்போவதை அல்ல, கிறிஸ்துவின் சிலுவையில் நடந்ததும், சபையின் காலத்தில் நடந்தேறுகிறதுமான காரியங்களே இங்கே தீர்க்கதரிசனமாக பதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இயேசு கிறிஸ்து இன்று ராஜாவாக தம் சிங்காசனத்தில் அமர்ந்து தமது சபையின் மூலமாக உலகை அரசாண்டுகொண்டு இருக்கிறார் (ஆயிர வருட அரசாட்சி - கணக்கிலடங்கா நீண்ட கால அரசாட்சி). இங்கே நாம் பார்க்கிறோம், நமது ராஜா பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர். அவர் சீயோன் என்னும் பர்வதத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டார். ஆகவே தான் எபிரேயர் 12:22ல் இப்படியாக வாசிக்கிறோம், "நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்... வந்து சேர்ந்தீர்கள்"  இங்கே சீயோன் பர்வதம் என்பது தேவனுடைய சபையைக் குறிக்கிற சொல்லாடலாக இருக்கிறது. சீயோன் பர்வதம் என்னும் தேவனுடைய சபை தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கூட்டத்தாரால் ஆனது. அவர்கள் உலகம் உண்டாகும்முன் கிறிஸ்துவின்மூலம் மீட்கப்பட தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு நேசிக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்தியில் தேவன் தங்கி வாசம் செய்கிறார் (குடிகொள்ளுகிறார்). தேவன் தமது சபையை கிறிஸ்துவின் சிலுவையின் மூலம் இவ்வுலகில் ஸ்தாபித்து அதன் ராஜாவாக இருந்து தமது அரசியல் அமைப்பு சட்டமாகிய சுவிஷேசம் என்னும் சட்டத்தின் மூலம் தமது ஆட்சியை பூமியில் நீதியாய் செய்துகொண்டு வருகிறார். இந்த பரிசுத்த சீயோன் பர்வதமாகிய தேவனுடைய சபையில் கிறிஸ்து ராஜாவாக இருக்க, தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனுடைய இரட்சிப்பின் மகத்துவங்களை ஆராய்ந்து அவரை மகிமைப்படுத்துகிறார்கள். இந்த தேவனுடைய சபையில் வேதம் வாசிக்கப்பட்டு போதிக்கப்படுகிறது. இந்த பரிசுத்த சபையானது தேவனுடைய நீதி நியாங்களை போதித்து, மனிதனுடைய பாவநிலையை கண்டிக்கிறது. மனிதனுடைய மீட்புக்கான ஒரே வழி நற்பாறையாகிய கிறிஸ்துவில் மறைந்துகொள்வதே என்று வலியுறுத்தி போதிக்கிறது. இயேசு கிறிஸ்து தமது பிதாவினால் மகிமையினாலும் கணத்தினாலும் முடிச்சூட்டப்பட்டவராய், பொற்கிரீடம் அனிந்து தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து தமது சுவிஷேசம் என்னும் செங்கோலைக் கொண்டு இவ்வுலகை அரசாளுகிறார். இப்படி கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்தவராய் தமது சபையின் மூலமாக சுவிஷேச பிரபலியமாகுதலின் மூலம் ஆட்சி செய்கிறவராக இருக்கிறார். 

(- ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)

சங்கீதம் 2:1-4 | விளக்கவுரை

கருத்துரையிடுக

புதியது பழையவை