"நித்தம் அருள்செய் தயாளனே!" - பாடல் விமர்சனம்
"நித்தம் அருள்செய் தயாளனே!" என்ற இந்த பாடலுக்கு அடிமையாகி சில வாரங்களாக கேட்டு வருகிறேன். இன்றைய நவீன மெட்டுடைய பாடல்களைக் கேட்பதைவிட, இம்மாதிரியான பாடல்களைக் கேட்பது அமைதியைக் கொடுக்கிறது. இந்த பழைய பாடலின் ஆசிரியர் ஆ.ஜா. பிச்சைமுத்து அவர்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் அருளை/கிருபையை/ஆசீர்வாதத்தை நல்குமாரு ஒரு தேவபக்தன் கெஞ்சி பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
அனுபல்லவியில், தேவகுமாரனின் பரிசுத்தத்தையும் நீதியையும் போற்றி, விண்ணக தூதர்களும் போற்றும் அழகன் என்று வர்ணிக்கிறார். 'சத்திய வேதவி னோதலங்காரா' என்ற வரியை 'சத்திய வேத வினோத அலங்காரா' என பிரித்து காணும்போது, யோவான் 1ஆம் அதிகாரம் தான் மனதில் வருகிறது. தேவ குமாரனும் மெய்யான வார்த்தையுமானவர் மானிடனாகி மானிடனை வீழ்த்திய பிசாசின் தலையை சிலுவையில் நசுக்கியதை மிக அழகாக கவிஞர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அநேகர் பிசாசானவனின் தலை நசுக்கப்படவில்லை என நினைக்கிறார்கள்/நம்புகிறார்கள். ஆனால், அநேக முன்வாழ்ந்த பரிசுத்தவான்கள் சாத்தானின் தலை சிலுவையில் நசுக்கப்பட்டுவிட்டதென்றே (இறந்தகால நிகழ்வு) நம்பினர். ஆகவே, நானும் அப்படியே நம்புவது நலமாக இருக்கும் (வெளி 20). (விவாதத்திற்கு வரவில்லை. நீங்கள் விரும்பினால் எல். ஆர். ஷெல்டன் எழுதிய "ரெவலேஷன் 20" என்ற புத்தகத்தைப் படித்துப்பாருங்கள்.)
பின் கவிஞர் தன்னுடைய முதல் சரணத்தில், பாவிகளான மானிடர்மீது பட்சமாக இருப்பவனே, எங்கள் பாவம் தீர்ப்பவனே என்று பாடுகிறார். எப்போதும் மாறாத அழகு நிறைந்தவனே எங்கள் ஆத்தும நாதனே என்று கிறிஸ்துவின் அழகைப் பாடுகிறார். எங்களை இரட்சிக்கின்ற நல்ல செய்தியின் மன்னவன் அவர் என்று பாடுகிறார். சுவிஷேசத்தின் மையம் கிறிஸ்து என்பதை வலுவாக கூறுகிறார். பாவத்தின்மீதும், சாத்தானின் மீதும் அதிகாரம் படைத்து வெற்றி கண்டவனே, துதி பாடல்களால் சூழ்ந்துள்ளவனே என்று பாடுகிறார்.
இரண்டாம் சரணத்தில் இந்த பாடலை ஒரு புது வருட பாடலாகவே மாற்றி விடுகிறார். இது கவிஞரின் சிந்தனைத்திரனை இரசிக்க வைக்கிறது. முதலில் இறைவனை துதி பாடுவதும், பின் இரைஞ்சுவதும் பக்தர்களின் மரபே (பிலி 4:6). இந்த பாடலை இத்தனை ஆண்டுகள் கேட்காமல், பாடாமல் இருந்துவிட்டோமே என ஏங்கவைக்கிறது. சென்ற ஆண்டு முழுவதும் எங்களைக்கண்டு கொண்டவனே, எந்தவித நாச மோசமும் நேராமல் இம்மட்டும் எங்களை காத்தவனே என்று ஆண்டவருடைய தெய்வீக பராமரிப்பை கூறி நன்றி செலுத்துகிறார். சென்ற ஆண்டுமட்டும் எங்களைக் காத்துக்கொண்டீர். இந்த புதிய ஆண்டையும் காண அருள் (கிருபை) ஈந்தீர். மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் சகோதர சகோதரிகள் சபையாக புதிய வருடத்தில் ஒருவரையொருவர் கண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தோம். இவையனைத்திற்க்கும் நன்றி செலுத்துகிறோம். உமது நல் ஆவியை எங்களைவிட்டு எடுத்துப்போடாமல், நித்தமும் இரட்சிப்பில் வாக்களித்தபடி காத்து, உமது சமூகத்தில் இருக்குமாரு செய்யும். எங்களோடு கூடவே இருந்து எங்கள் ஜெபம் கேளும் கர்த்தரே என்று முடிக்கிறார்.
தமிழ் பாடலுக்கு விமர்சனம் எழுதும் அளவு புலமை பெற்றவன் நானல்ல. இந்த பாடல் என் மனம் கவர்ந்தமையால், பாடலின் அர்த்தத்தில் நான் புரிந்ததை எழுதுகிறேன். ஆ.ஜா. பிச்சைமுத்து இயற்றிய இந்த பாடலை முனைவர் ஷர்மி மிக நேர்த்தியாக பாடியுள்ளார்கள். அந்த வீடியோ இணைப்பை இங்கே தருகிறேன். இவர்களின் குரலில் இந்த பாடலைக் கேட்கும்போது என்னையறியாது ஏதோ உலகில் மிதந்ததுபோலவே நான் உணர்ந்தேன். என்னுடைய தமிழில் பிழை இருப்பின் பொருத்துக்கொள்ளுங்கள்; சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி.
தேவனுக்கே மகிமை!
பாடல் வரிகள்:
பல்லவி
நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.
அனுபல்லவி
உத்தம சற்குண தேவ குமாரா!
உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா!
சரணம் 1
பட்சப் பரம குமாரனே,
எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி!
அட்சய சவுந்தர ஆத்துமநாதா,
அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா,
ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா
சரணம் 2
சென்றாண்டெமை முகம் பார்த்தவா,
ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்,
ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு
கருத்துகள்
கருத்துரையிடுக