திரித்துவம் அல்லது திரியேகம் என்கிற வார்த்தை வேதத்தில் இல்லையே ஏன்? இருந்திருக்கலாமல்லவா?

பதில்: உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. அப்படி ஒரு சொல் இருந்திருந்தால் பல குழப்பங்களுக்கு அவசியமே இல்லாமல் போயிருக்குமே என்று நினைக்கிறீர்கள். நல்லது. ஆனால், அப்படி ஒரு வார்த்தை இல்லாமல் இருப்பது இன்னமும் சிறப்பாகவே இருக்கிறது. எப்படி? 

முதலாவது, முதலில் சில வேத அடிப்படைகளை மனதில் கொள்வது அவசியம். தேவன் தன்னைப் பற்றி முழுக்க முழுக்க எல்லாவற்றையும் வெளிப்படையாக வரிவரியாகச் சொல்லவில்லை. நேரடியாகச் சொன்னவை ஏராளம், மறைவாகச் சொன்னவையும் அதிகம். முற்றிலும் சொல்லாமல் விட்டவையும் ஏராளமாக இருக்கக்கூடும். 
இதற்கு பல காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.

1. எல்லாவற்றையும் வெளிப்படுத்தினாலும் அவற்றை அறிந்து தெளியும் அளவுக்குப் படைப்புகளாகிய நாம் ஒன்றும் புத்திசாலிகளல்ல. அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். படைத்தவரை முழுவதும் அறிய படைப்பால் இயலாது என்பதை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

2. வேதாகமத்தில் மறைபொருட்களாகச் சொல்லப்பட்டவை அனேகம். அவற்றில் பல, வேதத்தை ஆராய ஆராய வெளிப்படும் தன்மை உடையவை. இவற்றை பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் ஆராய்ந்து அனுபவிக்கலாம். அவற்றை திறந்த மனதுடன் கற்பது அவசியம்.

3. சில மறைபொருட்கள் நம்மால் விளங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆராய்ந்து அனுபவிக்கக்கூடியவை. அவை முற்றும் மறைபொருளாக இருப்பதும் இல்லை. அதேசமயம் அவற்றை முற்றிலும் தெரிந்துகொள்ளவும் இயலாது. அதாவது, இது மேற்சொன்ன முதல் இரண்டும் கலந்த கலவை. திரித்துவம் இப்படிப்பட்ட தன்மையை உடையது. எத்தனையோ பேர் முயன்றும் முற்றாக முடியாததற்குக் காரணம் இதுதான். இங்கு அறியவும் வேண்டும். அறிந்தவரை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

இப்போது கேள்விக்கு வருவோம். கிறிஸ்தவர்களாகிய பலருக்கும் இருக்கும் சந்தேகம் - இந்த வார்த்தை ‘திரித்துவம்’ வேதத்தில் எங்கும் இல்லையே, ஏன்? வேதத்தில் இந்த வார்த்தை இருந்திருந்தால் இப்படிக் கேள்விகள் வராதல்லவா? என்பது.

வராதுதான். ஆனால், தற்போதைய நிலையில், அதாவது அவரது வேதத்தில் அவரைப் பற்றி சில விஷயங்களை அவர் சொல்லாததே ஒர் அழகுதான் என்று நான் கருதுகிறேன். அதாவது, அவர் தன் பிள்ளைகள் , தன்னை நேசிப்பவர்கள் தன்னை இன்னும் அறியவும், தொடருந்து வளரவும் தன்னைப் பற்றிய சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல் விட்டு மறைத்து வைத்திருக்கிறார். இன்னும் விளங்கச் சொன்னால், மறைவான விஷயங்களை சில வசனங்களில் அவர் வெளிப்படுத்துவதைத் ‘தியானித்து’ அறிய அவரே விரும்பி வேண்டுமென்றே உண்டாகிய வெற்றிடம் அது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரசியமேது? அவரைப் பற்றிய ஆராய்ச்சி ஏது? நமக்கும் அவரைப் பற்றி அறியும் ஆராய்ச்சி எவ்வளவு உணர்வுப்பூர்வமானதாகவும், தேடித் தெரிந்து, திகைத்துக் கண்டுணர்வது மகிழ்வையும் அளிப்பதாக அல்லவா இருக்கிறது? அன்பான உறவுகளுக்குள் வார்த்தைகள் இன்றியே அறிய வழிகள் உண்டே. இரண்டாயிரத்துச் சொச்சம் ஆண்டுகளாக, இலட்சக்கணக்கானோர், படித்தும், அனுபவித்தும் இன்னமும் எக்கச்சக்கமான விளக்கங்கள் வேதத்தில் கொட்டிக் கிடக்கின்றனவே? இதற்குக் காரணம் அது அருளப்பட்டவிதம்தான் என்பதை நாம் உணராவிட்டால் எப்படி?

தேவன் தன் மூவரான ஏகராக இருக்கும் திரியேகத்தன்மையை வேதத்தில் பல இடங்களில் விளக்கியிருக்கிறார். இதையெல்லாம், ஆராய்ந்தவர்கள் அனுபவிக்கவே செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த வேலையை நம்மிடம் மட்டுமே விட்டுவிடாமல், இரட்சிப்புக்குள் வளரும் அனைவரையும் குழப்பத்துடன் தனியே விடாமல், பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தாங்குகிறார். அந்தப் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்திருக்கும் எவருக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருக்கும் திரியேக நாதரை அடையாளம் காண்பது பெரிய விஷயமேயில்லை.திரியேகத்துவம் ஏதோ ஒரிருவர் கண்டறிந்த விஷயமல்ல. காலமேல்லாம் அவருடைய வார்த்தைகளை மெய்யாய் நேசிக்கும் எவருக்கும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் மறைபொருள் இது. 

உறவுகளுக்கு இடையே சொல்லப்படாத வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமை அந்த உறவுகளை இன்னமும் உணர்வுள்ளதாக்கி உன்னதமாக்குகின்றன என்பதை அறியாதவர்களா நாம்?

கருத்துகள்