உடைந்த இருதயம் - தூய்மைவாதிகளின் ஜெபம்

தேவனே ! 

என் வாழ்நாளில் ஒரு நாளும், உம் பார்வையில் குற்றமுள்ளவனாக நிரூபிக்காமல் கடந்து போகவில்லை.

ஜெபங்களற்ற இருதயத்தில் இருந்து ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டுள்ளன;

துதி என்பது பெரும்பாலும் புகழற்ற துதியாகவே இருந்து வருகிறது;

எனது சிறந்த சேவைகள் அழுக்கான கந்தையாய் இருக்கிறது.

ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசுவே ! உமது சமாதானத்தை ஏற்படுத்தும் காயங்களில் நான் ஒரு மறைவை கண்டுகொள்ளட்டும்; 

என் பாவங்கள் பரலோகத்திற்கு உயர்ந்தாலும், உமது தகுதிகள் அவைகளுக்கு மேலே உயரும்;

அநீதி என்னை நரகத்தில் தள்ளினாலும், உமது நீதி என்னை உமது அரியணைக்கு உயர்த்துகிறது;

என்னில் உள்ள அனைத்தும் என்னை நிராகரிக்க அழைக்கின்றன, உம்மில் உள்ள அனைத்தும் என்னை ஏற்றுக்கொள்கின்றன;

நான் பரிபூரண நீதியின் சிங்காசனத்திலிருந்து அளவற்ற கிருபையையுடைய உமது சிங்காசனத்திற்கு முறையிடுகிறேன்.

உமது தழும்புகளால் குணமாகிறேன் என்கிற; என் அக்கிரமங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர் என்கிற; நான் உமக்குள் தேவநீதியாகும்படிக்கு, பாவம் அறியாத நீர் எனக்காக பாவமாக்கப்பட்டீர் என்கிற; என் கொடிய பாவங்கள் என் பன்மடங்கு பாவங்கள் மன்னிக்கப்பட்டும், உமது மறைக்கும் இரத்தத்தின் கடலில் புதைக்கப்பட்டும் இருக்கின்றன என்கிற; உறுதியளிக்கும் உமது குரலைக் நான் கேட்க எனக்கு அருளிச்செய்யும்;

நான் பாவி, ஆனால் மன்னிக்கப்பட்டேன்; தொலைந்திருந்தேன், ஆனால் இரட்சிக்கப்பட்டேன்; அலைந்து திரிந்தேன், ஆனால் கண்டுபிடிக்கப்பட்டேன்; பாவம் செய்கிறேன், ஆனாலும் சுத்திகரிக்கப்படுகிறேன்; 

நிரந்தரமான உடைக்கப்பட்ட இருதயத்தை எனக்குத் தாரும், என்னை எப்பொழுதும் உமது சிலுவையைப் பற்றிகொள்ளச் செய்யும், ஒவ்வொரு கணமும் இறங்கும் உமது கிருபையால் என்னை நிரப்பியருளும். என் வாழ்வின் வனாந்திரத்தில் தெளிவானதாயும் கறைபடாததாயும் பாய்கிற, படிகம் போல் மின்னுகிற தெய்வீக அறிவின் ஊற்றுகளை எனக்கு திரவும் தேவனே. 

ஆமென்!


The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
The Broken Heart
Translation: Collin



கருத்துகள்