உன்னதமான பரலோக தேவனே !!
என் மனதின் சிங்காசனத்தை ஆக்கிரமித்து, என்னை முழு உடைமையாக்கி ஆளுகை செய்யும். கலகம் செய்கிற ஒவ்வொரு இச்சையையும் தாழ்த்தி, உமது வல்லமையை வெளிப்படுத்தி, என்னை என்றென்றும் உம்முடையவனாக்கும்.
என் ஒவ்வொரு மூச்சிலும் துதிக்கப்படுவதற்கு நீர் பாத்திரர், என் ஆத்துமாவின் ஒவ்வொரு திறனுடன் உம்மை நேசித்தேன், என் வாழ்வின் ஒவ்வொரு செயலாலும் உம்மை சேவித்தேன். நான் மதிப்பற்றவனாகவும், இழிவாகவும், அழுக்கடைந்தவனாகவும், மாசுபட்டவனாகவும் இருந்தபோது, நீர் என்னை நேசித்தீர், ஏற்றுக்கொண்டீர், கிரயத்துக்குக் கொண்டீர், கழுவினீர், அனுக்கிரகம் செய்தீர், உடுத்துவித்தீர், அலங்கரித்தீர்.
உம்மைப் பார்ப்பதற்குக் கண்கள் இல்லாமல், உம்மைக் கேட்க செவிகள் இல்லாமல், உம் மகிழ்ச்சியை ரசிக்க சுவை இல்லாமல், உம்மை அறியும் அறிவில்லாமல், நான் என் அக்கிரமங்களில் மரித்துப் போய் இருந்தேன்.
ஆனால் உமது ஆவியானவர் என்னை உயிர்ப்பித்தார், ஒரு புது சிருஷ்டியாக என்னை ஒரு புதிய உலகத்திற்கு கொண்டு வந்தார்.
எனக்கு ஆவிக்குரிய உணர்வைக் கொடுத்து, உமது வார்த்தையை எனக்கு ஒளியாகவும், வழிகாட்டியாகவும், ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் திறந்துள்ளார். உமது பிரசன்னம் எனக்கு முடிவில்லாத சமாதானத்தின் பொக்கிஷம். உமது அனுதாபத்திலிருந்து எந்தத் தூண்டுதலாலும் என்னைப் பிரிக்க முடியாதபடி, நீர் என்னை அன்பின் கயிறுகளால் இழுத்திருக்கிறீர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் என்னை மன்னிக்கிறீர், உமது அன்பிற்கு பாத்திரமாக நடக்க எனக்கு உதவி செய்யும், என் நம்பிக்கைகள் மற்றும் எனது சேவையில், உமது அன்பிற்கு தகுதியானவனாக நடக்க எனக்கு உதவும்.
என்னை காத்துக்கொள்ளும், ஏனென்றால் என்னால் என்னைக் காத்துக்கொள்ள முடியாது. எனக்கு எந்தத் தீமையும் ஏற்படாதவாறு என்னைக் காத்தருளும்.
பலர் போற்றும் ஒவ்வொரு பாவத்தையும் நான் ஒதுக்கித் தள்ளுகிறேன், உமது கைகளில் சாய்ந்து கொள்ளவும், உம் பக்கத்தில் நடக்கவும். உம்மோடு உரையாடவும், எனக்கு உதவும். அதினாலே இனிமேல் நான் பூமிக்கு உப்பாகவும் அனைவருக்கும் ஆசீர்வாதமாகவும் இருக்க முடியும்.
ஆமென் !!!!!
The Valley of Vision (The Collection of Puritan Prayers and Devotions)
REGENERATION
Translation: Collin
Tags
Prayers of Puritans