அசாதாரண மலையைக் கடந்த சைலேஸ்!

வேதப்பகுதி: பிலிப்பியர் 2:12–13

ஒரு காலத்தில், புகழ்பெற்ற ஓர் அரசன் தனது பயணத்தின்போது பெரிகிரீன் யூகி (Peregrine Yuki), சைலேஸ் ஸ்டிரைவ் (Silas Strive) என்ற இரண்டு அனாதை வாலிபர்களைக் கண்டார். அவர்களுடைய நிலையை அறிந்த அரசன், அவர்களைத் தமது அரச வாரிசுகளாகத் தத்தெடுக்கத் தீர்மானித்தார்.

அவர் அவர்களுடைய கடன்கள் அனைத்தையும் அடைத்துத் தீர்த்தார். பின்னர், ஓர் அரசாணையைப் பிறப்பித்தார்:

“இவர்கள் இனி அனாதைகள் அல்ல. எனது அரச குடும்பத்தின் வாரிசுகளாக இவர்களை ஏற்றுக்கொள்கிறேன். அசாதாரணமான ஒரு மலைத்தொடரின் மறுபுறத்தில் அமைந்துள்ள எனது பரந்த நிலத்தை இவர்களுக்குச் சொத்தாக வழங்குகிறேன். மக்களின் நன்மதிப்பைப் பெற்று, அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவரே எனது பட்டத்து இளவரசனாகவும் அரச வாரிசாகவும் விளங்குவார்.”

இதற்கிடையில், அரசன் தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர் தயைமூர்த்தியிடம் ஒரு தனிப்பட்ட கடிதத்தையும் ஒப்படைத்தார். அதில் ஓர் இரகசியம் பொதிந்திருந்தது.


அரசாணையைப் பார்த்த பெரிகிரீன் யூகி மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

“நமக்குப் பரந்த நிலம் சொத்தாகக் கிடைத்துவிட்டது! நாம் அரச வாரிசுகளாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டோம்! இனி எதற்காகப் பிரயாசப்பட வேண்டும்? உணவு, உடை, வசதி என்று அனைத்தும் நமக்குக் கிடைக்கும். மக்களோடு பழகி அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றுவிடலாம். அதற்காக அந்த அசாதாரண மலையில் ஏறி ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று எண்ணினான்.

அரசன் அளித்த வாக்குறுதியை அவன் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான்; ஆனால் அந்த வாக்குறுதியுடன் தொடர்புடைய பொறுப்பை உணரவில்லை.

அரச வாரிசு என்ற பெயர் அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த அழைப்பின் மேன்மையையும் அதன் நோக்கத்தையும் அவன் புரிந்துகொள்ளவில்லை.

அதனால், தனது வாழ்க்கையைச் சுகமாகக் கழிப்பதிலேயே அவன் கவனம் செலுத்தினான்.


ஆனால் சைலேஸ் ஸ்டிரைவ் வேறுவிதமாகச் சிந்தித்தான்.

“அரசன் நமக்குச் சொத்தாக வழங்கிய நிலம் எப்படிப்பட்டது? அதைச் சென்று பார்க்க வேண்டும். அதன் வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பயனுள்ள வாழ்க்கையை வாழலாம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” என்று தீர்மானித்தான்.

அவன் பெரிகிரீனையும் தன்னுடன் வரும்படி அழைத்தான்.

ஆனால் பெரிகிரீன் மறுத்துவிட்டான்.

“அந்த மலை மிகவும் உயரமானது; பாறைகள் நிறைந்தது. பாதையும் கடினமானது. நம்முடைய தகுதியைப்பார்த்தால் பார்த்தால், அங்கே ஏறுவதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்று கூறினான்.

எனவே, சைலேஸ் தனியாகவே தனது பயணத்தைத் தொடங்கினான்.

அந்த மலை உண்மையிலேயே அச்சமூட்டுவதாக இருந்தது. அதன் உயர்ந்த சிகரங்களும் செங்குத்தான பாறைகளும் பயணத்தை மிகவும் கடினமாக்கின. இருந்தாலும், மலையைக் கடந்து மறுபுறத்தை அடைய வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் முன்னேறினான்.

சிறிது நேரத்திலேயே அவன் களைப்படைந்தான். மேற்கொண்டு நடக்க முடியாமல், ஒரு பெரிய ஸ்திரமான பாறையின் அருகில் அமர்ந்து ஓய்வெடுத்தான்.

அப்போது, அவனுடைய நிலையை அறிந்த அமைச்சர் தயைமூர்த்தி அவனிடம் வந்தார்.

அவர் அவனுக்கு அரசன் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த ஒரு மறைவான வழியைக் காட்டினார். மலையின் பாறைகளுக்கு இடையே, பயணிகள் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்காக அரசன் ஒரு குகைப்பாதையை உருவாக்கியிருந்தார். அதற்குள் எளிதாகச் செல்ல ஒரு சிறிய வண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வழியைக் கண்ட சைலேஸ் ஆச்சரியமடைந்தான்.

“இந்தப் பாதை இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை!” என்றான்.

அமைச்சர் தயைமூர்த்தி புன்னகையுடன், “இந்தப் பாதையை உனக்காக அரசனே ஏற்பாடு செய்திருக்கிறார். நீ செய்ய வேண்டியது, அவர் காட்டும் வழியில் முன்னேறுவதுதான்” என்றார்.

சைலேஸ் அந்த வண்டியில் ஏறினான். அவன் தனக்குச் சொந்தமான பெலனால் மட்டுமே மலையைக் கடக்க வேண்டியதில்லை; அரசன் ஏற்பாடு செய்திருந்த உதவியைப் பயன்படுத்தியும் முன்னேற முடிந்தது.

இறுதியில், அவன் அசாதாரண மலையின் மறுபுறத்தைப் பாதுகாப்பாக அடைந்தான்.


மலையின் மறுபுறத்தை அடைந்த சைலேஸ், அரசன் தனக்குச் சொத்தாக வழங்கியிருந்த நிலத்தைப் பார்வையிட்டான்.

அந்த நிலம் மிகவும் வளமானதாக இருந்தது. ஆற்றின் இரு கரைகளிலும் பரந்திருந்த நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்றதாக விளங்கியது.

சைலேஸ் அங்கே சில உதவியாளர்களை அமர்த்திப் பயிரிடத் தொடங்கினான். பயிர்களைத் தொடர்ந்து பார்வையிட்டு, நிலத்தைப் பராமரித்து, விளைச்சலைச் சேமிப்பதற்காகக் களஞ்சியங்களையும் கட்டினான்.

ஆண்டுகள் கடந்தன. அவனுடைய உழைப்பும் பொறுப்புணர்வும் காரணமாக, அந்த நிலம் செழிப்படைந்தது. அவனும் ஒரு வளமிக்க நிலக்கிழாராக உயர்ந்தான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுடைய சொந்த ஊரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

இந்தச் செய்தியைக் கேட்ட சைலேஸ், தனது களஞ்சியத்தில் சேமித்து வைத்திருந்த தானியங்களை வண்டிகளில் ஏற்றி ஊருக்குக் கொண்டுவந்தான். அவற்றை நியாயமான விலையில் மக்களுக்கு விற்றான். இதனால், பல குடும்பங்கள் பசியிலிருந்து காப்பாற்றப்பட்டன.

அவனுடைய செல்வம் அவனுக்கு மட்டுமே பயனளிக்கவில்லை; மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது.

ஊர் மக்கள் அவனுடைய கருணையையும் பொறுப்புணர்வையும் பாராட்டினர். தங்களுடைய நெருக்கடியான காலத்தில் உதவிய அவனே தங்களுக்கு அரசனாக வருவதற்குத் தகுதியானவன் என்று கருதினர்.

இவ்வாறு, சைலேஸ் அரசனுடைய வாக்குறுதியைப் பெற்றவனாக மட்டுமல்லாமல், அந்த அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்றியவனாகவும் விளங்கினான்.


இதற்கிடையில், பெரிகிரீன் மக்களோடு பழகினான். அவர்களுடன் பயணித்தான். அரச வாரிசு என்ற பெயரும் அவனுக்கு இருந்தது.

ஆனால், அசாதாரண மலையைக் கடந்து தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பார்வையிட அவன் விரும்பவில்லை. அதன் வளங்களைப் பயன்படுத்தவும், அவற்றின் மூலம் பிறருக்கு உதவவும் அவன் முன்வரவில்லை.

எனவே, மக்கள் அவனைப் பொறுப்பற்றவனாகவும் சோம்பேறியாகவும் கருதினர்.

இறுதியில், அரசன் வழங்கிய அழைப்பின் மேன்மையை உணர்ந்து அதற்கேற்ற வாழ்க்கையை வாழ்ந்த சைலேஸ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றான். பெரிகிரீனோ, அரச வாரிசு என்ற அழைப்பின் நோக்கத்தை உணராமல் வாழ்ந்ததால், மக்களின் ஆதரவை இழந்தான்.

அவன் சாதாரண குடிமகனாகவே எஞ்சினான்.


சைலேஸ் மலையைக் கடந்து, அரசன் வழங்கிய நிலத்தை அடைந்ததற்குப் பின்னால் ஓர் உண்மை இருந்தது.

அரசன் அமைச்சர் தயைமூர்த்தியிடம் கொடுத்திருந்த கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்:

“இந்த அசாதாரண மலையைக் கடந்து எனது நிலத்தை அடைவது மனிதனுடைய இயல்பான பெலனால் எளிதில் முடியாத காரியம். எனது மகன்களில் யாராவது அந்த மலையைக் கடக்க முயற்சி செய்தால், நான் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கும் மீட்பின் பாதையை அவர்களுக்குக் காட்டுவாயாக. அவர்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல உதவி செய்து, அவர்களுடைய பயணம் நிறைவேறும்வரை அவர்களைப் பாதுகாப்பாயாக.”

இதுவே சைலேஸின் பயணத்தில் மறைந்திருந்த இரகசியம்.

அவன் பயணத்தைத் தொடங்க வேண்டியிருந்தது. மலையைக் கடக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் அவன் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஆனால், அவனுடைய பயணம் வெற்றியடைவதற்குத் தேவையான வழியையும் உதவியையும் அரசனே முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார்.


இந்த உவமை, பிலிப்பியர் 2:12–13-ல் பவுல் கூறுகின்ற ஆவிக்குரிய சத்தியத்தைச் சிந்திக்க நமக்கு உதவுகிறது.

“ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே... பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” பிலிப்பியர் 2:12

அடுத்த வசனம்

“ஏனெனில், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார். பிலிப்பியர் 2:13

பவுல் இங்கே, இரட்சிப்பை நம்முடைய முயற்சியால் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கவில்லை. பாவிகளாகிய நாம் நம்முடைய கிரியைகளால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. இரட்சிப்பு தேவனுடைய கிருபையினால், கிறிஸ்துவின்மீதான விசுவாசத்தின் வழியாக மட்டுமே நமக்கு அருளப்படுகிறது.

அப்படியானால், “உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” என்று பவுல் ஏன் கூறுகிறார்?

ஏனெனில், தேவன் நம்மை இரட்சிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை. அவர் நம்மில் கிரியை செய்து, நம்மைத் தமது சித்தத்தின்படி வாழச் செய்கிறார். நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பின் கனிகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். நமது சிந்தனையிலும், விருப்பங்களிலும், செயல்களிலும் கிறிஸ்துவுக்கு ப்ரதிபளிக்கப்பட வேண்டும்

எனவே, இரட்சிப்பை நிறைவேறப் பிரயாசப்படுதல் என்பது இரட்சிப்பைச் சம்பாதிப்பதல்ல; தேவன் அருளிய இரட்சிப்புக்கேற்ற வாழ்க்கையைப் பயத்தோடும் நடுக்கத்தோடும், ஆழ்ந்த பயபக்தியோடும் வாழ்வதாகும்.

பெரிகிரீன் அரசனுடைய அழைப்பைப் பெற்றிருந்தும் அதன் நோக்கத்தைப் புறக்கணித்தான். அதுபோல, இரட்சிப்பின் மேன்மையை உணர்ந்து, அதற்கேற்ற பரிசுத்த வாழ்க்கையில் வளர வேண்டிய பொறுப்பை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.

ஆனால், சைலேஸின் பயணம் நம்முடைய முயற்சியை மட்டுமே முன்னிறுத்துவதில்லை. அவனுக்காக அரசன் முன்கூட்டியே வழியை ஏற்பாடு செய்திருந்தார். அதுபோல, கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் கீழ்ப்படிந்து வாழ்வதற்குத் தேவையான விருப்பத்தையும் பெலனையும் தேவனே நம்மில் உருவாக்குகிறார்.

நாம் பிரயாசப்படுகிறோம்; ஏனெனில் தேவன் நம்மில் கிரியை செய்கிறார். நாம் கீழ்ப்படிகிறோம்; ஏனெனில் தேவன் நம்மைத் தமது சித்தத்தின்படி வாழச் செய்கிறார்.

இதுவே பிலிப்பியர் 2:12–13-ன் அழகான சத்தியம்: தேவனுடைய இறையாண்மையும் மனிதனுடைய பொறுப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. நாம் பரிசுத்தமாக வாழ்வதற்கான கட்டளையை தேவன் கொடுக்கிறார்; அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் வல்லமையையும் அவரே அருளுகிறார்.

கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்கிறவர்களுக்குத் தேவையான கிருபையும் பெலனும் அவரிடமே இருக்கின்றன. நம்முடைய பலவீனத்தைக் காட்டிலும் அவருடைய வல்லமை பெரியது. நம்முடைய குறைபாடுகளைக் காட்டிலும் அவருடைய கிருபை நிறைவானது.

எனவே, நம்முடைய இரட்சிப்பின் மேன்மையை உணர்ந்து, சோம்பேறித்தனத்திற்கோ அலட்சியத்திற்கோ இடமளிக்காமல், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்தத்தில் வளர்ந்து, நமக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையை உண்மையுடன் வாழ தேவன் தாமே கிருபை அருளட்டும்.

ஏனெனில், நாம் பிரயாசப்படும்போது நம்மைத் தனியே விட்டுவிடுகிற தேவன் நம்முடையவர் அல்ல. நம்மில் கிரியை செய்கிறவரும், நம்மைத் தாங்குகிறவரும், தமது சித்தத்தை நிறைவேற்ற நம்மைப் பெலப்படுத்துகிறவரும் அவரே.


இரட்சிப்பு தேவனுடைய ஈவு; பரிசுத்த வாழ்க்கை அதற்குரிய கனி. பிரயாசப்படுவது நம்முடைய பொறுப்பு; பிரயாசப்படுவதற்கான விருப்பத்தையும் பெலனையும் நம்மில் உருவாக்குவது பரிசுத்த ஆவியானவர்.

அசாதாரண மலையைக் கண்டு பின்வாங்கிய பெரிகிரீனைப்போல் நாம் வாழாமல், அரசன் ஏற்பாடு செய்த வழியில் முன்னேறிய சைலேஸைப்போல், ஸ்திரமான பாறையாகிய கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டு தேவனுடைய கிருபையைச் சார்ந்து, விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக.

 

கதை ஆசிரியர்: ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ் 


 

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்