அதநாஷியஸ் விசுவாசப்பிரமாணம்
இரட்சிப்படைய விரும்புகிறவன் எவனோ; அவன் திருச்சபைக் குரிய பொதுவான விசுவாசத்தை எல்லாவற்றிலும் முதன்மையாய்ப் பற்றிக்கொள்ளவேண்டும். அந்த விசுவாசத்தைப் பழுதின்றி முழுமையும் அநுசரியாதவன் என்றைக்கும் கெட்டுப்போவான் என்பதற்குச் சந்தேகமில்லை. திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசமானது, தேவத்துவமுள்ளவர்களைக் கலவாமலும், தேவத்துவத்தைப் பிரியாமலும், ஏகதேவனைத் திரித்துவமாகவும்; திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்கவேண்டுமென்பதே
• பிதாவானவர் ஒருவர், குமாரனாவர் ஒருவர்; பரிசுத்த ஆவியானவர் ஒருவர்.
• ஆனாலும் பிதாவுக்கும், குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும், ஒரே தேவத்தன்மையும், சமமகிமையும், சமநித்திய மகத்துவமும் உண்டு. பிதா எப்படிப்பட்டவரோ, குமாரனும் அப்படிப்பட்டவர், பரிசுத்த ஆவியும் அப்படிப்பட்டவர்.
• பிதா சிருஷ்டிக்கப்படாதவர், குமாரனும் சிருஷ்டிக்கப்படாதவர்; பரிசுத்தஆவியும் சிருஷ்டிக்கப்படாதவர்.
• பிதா அளவிடப்படாதவர், குமாரனும் அளவிடப்படாதவர், பரிசுத்தஆவியும் அளவிடப்படாதவர்.
• பிதா நித்தியர், குமாரனும் நித்தியர், பரிசுத்தஆவியும் நித்தியர்.
• ஆகிலும் மூன்று நித்திய வஸ்துக்களில்லை; நித்திய வஸ்து ஒன்றே.
• அப்படியே மூன்று அளவிடப்படாத வஸ்துக்களில்லை, மூன்று சிருஷ்டிக்கப்படாத வஸ்துக்களில்லை, சிருஷ்டிக்கப்படாத வஸ்து ஒன்றே, அளவிடப்படாத வஸ்து ஒன்றே.
• அப்படியே பிதா சர்வவல்லவர், குமாரனும் சர்வவல்லவர்; பரிசுத்த ஆவியும் சர்வவல்லவர். ஆகிலும் மூன்று சர்வவல்ல வஸ்துக்களில்லை: சர்வவல்ல வஸ்து ஒன்றே.
• அப்படியே பிதா தேவன், குமாரனும் தேவன், பரிசுத்த ஆவியும் தேவன்.
• ஆகிலும் மூன்று தேவர்களில்லை; தேவன் ஒருவரே.
• அப்படியே பிதா கர்த்தர், குமாரனும் கர்த்தர், பரிசுத்த ஆவியும் கர்த்தர்.
• ஆகிலும் மூன்று கர்த்தர்களில்லை; கர்த்தர் ஒருவரே.
அம்மூவரில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தேவனென்றும் கர்த்தரென்றும் அறிக்கையிடவேண்டுமென்று கிறிஸ்துமார்க்க சத்தியத்தினாலே கட்டளையிட்டிருக்கிறதுபோல, மூன்று தேவர்கள் உண்டென்றும், மூன்று கர்த்தர்கள் உண்டென்றும் சொல்லக்கூடாதென்று திருச்சபைக்குரிய பொதுவான சித்தாந்தத்தினாலே கட்டளையிட்டிருக்கிறது.
• பிதா ஒருவராலும் உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப் பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல.
• குமாரன் பிதாவினாலேயே ஜெனிப்பிக்கப்பட்டு இருக்கிறவர்; உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல.
• பரிசுத்தஆவி பிதாவினாலும் குமாரனாலும் இருக்கிறவர்; உண்டாக்கப்பட்டவருமல்ல, சிருஷ்டிக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவருமல்ல, புறப்படுகிறவரே.
• ஆகையால் மூன்று பிதாக்களில்லை, ஒரே பிதாவும்; மூன்று குமாரருமில்லை, ஒரே குமாரனும், மூன்று பரிசுத்தஆவிகளில்லை, ஒரே பரிசுத்த ஆவியும் உண்டு.
• அன்றியும் இந்தத் திரித்துவத்தில் ஒருவரும் முந்தினவருமல்ல, பிந்தினவருமல்ல, ஒருவரில் ஒருவர் பெரியவருமல்ல, சிறியவருமல்ல.
• மூவரும் சமநித்தியரும், சரிசமமானவரும் ஆகும்.
ஆதலால் மேற்சொல்லியபடி எல்லாவற்றிலும் ஏகத்துவத்தைத் திரித்துவமாகவும், திரித்துவத்தை ஏகத்துவமாகவும் வணங்க வேண்டும். ஆனபடியால், இரட்சிப்படைய விரும்புகிறவன்; திரித்துவத்தைக் குறித்து இப்படியே நினைக்கவேண்டும்.
மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மனுஷாவதாரத்தைக்குறித்துச் சரியானபடி விசுவாசிப்பதும் நித்திய இரட்சிப் படைவதற்கு அவசியமாயிருக்கிறது. நாம் விசுவாசித்து அறிக்கையிடுகிற சரியான விசுவாசமாவது: தேவகுமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்து தேவனும் மனுஷனுமாய் இருக்கிறார்.
உலகங்கள் உண்டாவதற்குமுன்னே அவர் ஜெனிப்பிக்கப்பட்டு, பிதாவின் தன்மையையுடைய தேவனாகவும் உலகத்தில் பிறந்து தம்முடைய தாயின் தன்மையையுடைய மனுஷனாகவும் இருக்கிறார்.
• குறைவற்ற தேவனாயும், பகுத்தறிவுடைய ஆத்துமாவும் நரதேகமும் பொருந்திய குறைவற்ற மனுஷனாயும் இருக்கிறார்.
• தேவத்தன்மையின்படி பிதாவுக்குச் சரியானவர்; மனுஷத்தன்மையின்படி பிதாவுக்கு தாழ்ந்தவர்.
• அவர் தேவனும் மனுஷனுமாயிருந்தும் இருவராயிராமல், கிறிஸ்து என்னும் ஒருவராகவே இருக்கிறார்.
• தேவத்தன்மை மனுஷத்தன்மையாய் மாறினதினாலேயல்ல, தெய்வத்தில் மனுஷத்தன்மையைச் சேர்த்துக்கொண்டதினாலேயே ஒருவராயிருக்கிறார்.
• இரண்டு தன்மையும் கலந்ததினாலேயல்ல; ஒருவராகப் பொருத்தின தினாலே, முற்றும் ஒருவராயிருக்கிறார்.
• பகுத்தறிவுடைய ஆத்துமாவும் சரீரமும் பொருந்தி, ஒரே மனுஷனாயிருப்பதுபோல, தேவனும் மனுஷனும் பொருத்தி, ஒரே கிறிஸ்துவாயிருக்கிறார்.
• அவர் நமக்கு இரட்சிப்புண்டாகப் பாடுபட்டு, பாதாளத்தில் இறங்கி, மூன்றாம்தான் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்.
• அவர் பரமண்டலத்துக்கேறி, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.
• அவர் வரும்பொழுது, சகல மனுஷரும் தங்கள் சரீரங்களோடு எழுந்து; தங்கள் கிரியைகளைக் குறித்துக் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
• நன்மை செய்தவர்கள் நித்திய ஜீவனையும், தீமைசெய்தவர்கள் நித்திய அக்கினியையும் அடைவார்கள்.
திருச்சபைக்குரிய பொதுவான விசுவாசம் இதுவே; இதை ஒருவன் உண்மையாய் விசுவாசியாவிட்டால் இரட்சிப்படையான். ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் இருக்கிற படியே, பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்தஆவிக்கும் மகிமை உண்டாவதாக, ஆமென்.
இவைகளை நீங்கள் படிக்க விரும்பினால் "கிறிஸ்தவ திருச்சபைகளின் விசுவாச அறிக்கைகள்" என்ற புத்தகத்தை தமிழில் வாங்கிப்படியுங்கள். இந்த புத்தகத்தைப்பிரசூரிப்போர், கிருபை வெளியீடுகள், மதுரை - 625 016, தமிழ்நாடு, இந்தியா.
வலைதளம்: www.gracegospelchurches.org
கருத்துகள்
கருத்துரையிடுக