நிசெயா விசுவாசப்பிரமாணம்
வானத்தையும், பூமியையும் காணப்படுகின்றதும், காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கின்ற சர்வவல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரேபேறான குமாரனுமாயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கின்றேன்.
அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே, நமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; பிதாவோடே ஓரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கியவர்.
மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்ச்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்தில் இருந்து இறங்கிப் பரிசுத்தாவியினாலே கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார்.
நமக்காக பொந்தியு பிலாத்துவின் காலத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்திற்கு ஏறி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்றார். உயிருள்ளோரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்க, மகிமையோடு திரும்ப வருவார். அவருடைய ராஜ்யம் முடிவற்றது.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கின்றவருமாய் பிதாவிலும், குமாரனிலும் நின்று புறப்படுகின்றவருமாய், பிதாவோடும், குமாரனோடும்கூடத் தொழுது தோத்தரிக்கப்படுகின்றவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கின்றேன். ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கின்றேன்.
பாவ மன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஓரே ஞானஸ்தானத்தை (1) அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனுமுண்டாகும் என்று காத்திருக்கின்றேன்.
1) நாம் சரீரப்பிரகாரமாக வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நீர் நிலைகளில் ஞானஸ்னானம் பெற்று நம் விசுவாசத்தை பிரசித்தப்படுத்தியிறுக்கிறோம். நல்லது. ஆனால், இவைகள் நம் பாவங்களைக் கழுவவில்லை. மாறாக வேதம் தெளிவாக போதிக்கும் சத்தியம் யாதெனில், நாம் ஒரே ஞானஸ்னானத்தை கிறிஸ்துவுக்குள் அவரை விசுவாசிக்கும்போது பெற்றோம். அதாவது, அவரோடு கூட மரித்தவர்களாகவும் அவரோடே உயிர்த்தெழப்பட்டும் இருக்கிறோம். இதுவே ஆவிக்குறிய ஞானஸ்னானம். (ரோமர் 6:4, 1 கொரி 12:13)
கருத்துகள்
கருத்துரையிடுக