யோவான் 1:1-5 திருமறை விளக்கம் - ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்

   தேவாதி தேவனின் தன்மைகளையும் தேவ குமாரனும் நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை எடுத்தியம்புகிற யோவான் எழுதின சுவிஷேச புத்தகத்திற்க்கு விளக்கம் எழுதத்தொடங்குமுன் யோவான் 1ஆம் அதிகாரத்தின் மேன்மையை மூத்த பண்டிதர்கள் சொல்வதை உங்களுக்கு எடுத்து காட்ட விரும்புகிறேன். ஆஸ்டின் ஒருமுறை சிம்ப்லிகஸ் என்னும் அவருடைய தோழர் ஒரு ப்லேட்டோவின் தத்துவவியலாளர் கூறியதாக சொன்னது; யோவான் சுவிஷேசத்தின் இந்த முதல் வசனங்கள் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும் என்றார். கற்றரிந்த பிரான்ஸிஸ் ஜூனியஸ் அவருடைய வாழ்க்கை சரிதையை கூரும்போது, அவருடைய இளம் வயதில் மதங்களைக்குறித்த எண்ணங்களால் பாதிக்கப்பட்டதையும், எதிர்பாராதவிதமாக இந்த வசனங்களை படித்ததாகவும் அதில் அவர் அப்படிப்பட்ட தெய்வீகத்தன்மையை இந்த தர்க்கரீதியான வசனங்களில் கண்டதாகவும், அப்படிப்பட்ட அதிகாரத்தை, மேன்மையை இந்த எழுத்து நடைகளில் கண்டு நடுங்கியதாகவும், அந்த நாள் முழுவதும் தான் எங்கு இருக்கிறேன். என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்றே மறந்துபோனதாகவும் கூறினார். இதனால்தான் கிதியோன் இன்டர்நேஷனல் குழுவினர் யோவான் சுவிஷேச புத்தகங்களை ஜனங்களுக்கு வாரி தருகிறார்கள் போலும், இந்த வலிய வசன வரிகளில் என்ன பொதிந்துள்ளது என்பனவற்றைப் பார்ப்போம். சுவிஷேசகனாகிய யோவான் இதின்மூலமாக இயேசு கிறிஸ்து மெய்யான தெய்வமென்றும், அவர் பிதாவோடு ஒன்றாக இருந்தார் என்பதையும் நிறுவுகிறார்.

1. ஆதியிலே வார்த்தை இருந்தது -
   கிரேக்க மொழியில் 'வார்த்தை' என்ற சொல்லுக்கு 'லோகோஸ்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பதம் யோவான் சுவிஷேசகனின் ஏனைய புத்தகங்களில் தொடர்வதை கவனியுங்கள் - 1 யோவான் 1:1, 1 யோவான் 5:7, வெளி 19:13. அப்படியானால். வார்த்தை, ஜீவ வார்த்தை. தேவனுடைய வார்த்தை என்று வரும் பதங்கள் பெரும்பான்மையான இடங்களில் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. யூதர்கள் போதிக்கப்பட்ட விதத்தில், ஏசாயா புஸ்தகத்தில் வரும் மேசியாவை 'மெம்ரா' என்று குறிப்பது வழக்கம், 'மெம்ரா' என்பதற்கு 'யெகோவாவின் வார்த்தை (அல்லது ’கர்த்தருடைய வார்த்தை' என்று பொருள். ஆகவேதான், சுவிஷேசகன் யோவான் 1:18இல் தெள்ளந்தெளிவாக தான் ஏன் கிறிஸ்துவை வார்த்தை என்று அழைக்கிறார் என்பதை பின்வருமாறு விளக்குகிறார் - ஒரே பேறான குமாரன், பிதாவின் மடியிலிருக்கிறவர், பிதாவை வெளிப்படுத்தினவர்.

வார்த்தை இரண்டு பரிமானம் உடையது:
1) லோகோஸ் எண்டியாதிடோஸ் - உற்பத்தியான வார்த்தை மற்றும் 
2) லோகோஸ் ப்ரோஃபோரிகோஸ் - சப்தமிட்டு முழங்கின வார்த்தை

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் :-
   வார்த்தை என்றால் பொதுவாக ஒரு மனிதனின் சிந்தனையில் உதித்து, வாயில் பிறந்து வெளியே வருகிறது என்பது நம் புரிதல். அப்படியானல் இப்படி நாம் பேசி வெளியே கேட்கப்படும் முன் அந்த வார்த்தை இல்லாத ஒரு காலம் இருந்தது. பேசும்போது பிறக்கின்ற வார்த்தை, நாம் பேசும் முன் இருந்ததில்லை. ஆனால், வார்த்தையானவர் உருவாக்கப்படாதவர். நித்தியர். ஆகவேதான். சுவிஷேசகன் இரண்டாம் வசனத்தில் "அவர் ஆதியில் தேவனோடு இருந்தார்" என்று பதிவிடுகிறார். நம் தமிழ் வேதாகமத்தில் ஒன்றாம் வசனத்தில் “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது" என்று படிக்கிறோம். அதன் சரியான மொழிபெயர்ப்பு இப்படி வர வேண்டும்; “அந்த வார்த்தை தேவனோடு இருந்தது”. ஏனென்றால், மூல மொழியில் இரண்டு வசனத்திலும் வரும் சொல் ஒன்றாக உள்ளது - 'ப்ரோஸ்' (பொருள்: அவரோடு). ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சரியாக மொழிபெயர்த்துள்ளதைக் காணலாம். தமிழ் மொழி பெயர்ப்பிலும் இரண்டாம் வசனத்தில் இது தெளிவாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைக் காணலாம். (Jn 1:1b the Word was with God; Jn 1:2 The same was in the beginning with God.)

   நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, இந்த வசனங்களில் வரும் வார்த்தை எழுதப்பட்ட வார்த்தையைக்குறிக்கவில்லை. காத்தருடைய வார்த்தையானவரைக்குறிக்கிறது. இந்த வசனங்களில் வரும் வார்த்தை அஃறினையைக் குறிக்கவில்லை; உயர்தினையைக் குறிக்கிறது. நித்தியம் நித்தியமாக மாறாதிருக்கின்ற இந்த வார்த்தையானவர் இரத்தமும் சதையுமுள்ள மனிதனாக மாறினார் என்று ஆசிரியர் பதிவிடுகிறார் (யோவான் 1:14). இந்த வார்த்தையானவர் திரித்துவத்தின் இரண்டாம் நபராகிய தேவனுடைய குமாரன் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் திரித்துவத்தின் ஏனையோர் (பிதா, பரிசுத்த ஆவி) மாம்சமாக மாறவில்லை. மேலும் வார்த்தையானவர் காலத்திற்க்கு அப்பாற்பட்டவர். அவரைக்குறித்து மோசேயின் ஜெபத்தில் இப்படியாக பார்க்கிறோம், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாய் இருக்கிறீர். (சங் 90:2) வார்த்தையானவர் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் பலியாக வர வேண்டும் என்பது அவர் பேரிலான தேவனுடைய அநாதி திட்டமாக இருந்தது. அதற்கென்றே அவர் அபிஷேகம் (நியமிக்க) பண்ணப்பட்டிருந்தார். "பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்" (நீதி 8:23)

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று -
   ஆக ஆதியில் தேவனோடிருந்தவரும் உருவாக்கப்படாதவருமாகிய அவர் தேவன் என்று ஆசிரியர் முதல் வசனத்தில் பதிவிடுகிறார். அவர் கருத்திற்க்கு வலுசேர்க்கும் விதமாக பின்வருமாரு எழுதுகிறார் “சகலமும் அவர் மூலமாய் உண்டானது; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (யோவான் 1:3) ஆக, வார்த்தை என்ற பதத்தைப்பிடித்துக்கொண்டு, வார்த்தையாக வந்த தேவனுடைய குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என வாதமிடும் யெகோவா சாட்சியினரின் முகத்தில் கரி பூசும் விதமாகவே இந்த வசனம் அமைந்துள்ளது. இந்த வார்த்தையானவர் சிருஷ்டிக்கப்பட்டவரல்ல; அவரே சிருஷ்டிகர். அவர் மூலமாகவே நாம் காணும் விண்ணும், மண்ணும், அதின் யாவும் படைக்கப்பட்டது. அவர் இல்லாமல் ஒன்றும் படைக்கப்படவில்லை. வார்த்தையானவர் படைக்கப்பட்டவர் என்று கருதினால் இந்த வசனத்தின்படி அவர் அவரையே படைத்திருக்கவேண்டும். ஆனால் அது நடைபெற இயலா. ஒரு வஸ்து தன்னைத்தானே படைத்துக்கொள்ள முடியாது. இப்படியிருக்க படைக்கப்பட்ட எல்ல வஸ்துக்களுக்கும் படைப்பாளர் இந்த வார்த்தையானவரே என்று சுவிஷேசகன் மூன்றாம் வசனத்தில் தெளிவுபடுத்தி வார்த்தையானவரின் தெய்வீகத்தை மீண்டும் நிறுவுகிறார். ஆக, வார்த்தையானவர் எல்லாவற்றிற்கும் முந்தினவரும், சிருஷ்டிப்பாளருமாய் இருக்கிறார். இதையே அப்ட பவுல் கொலோ 1:16-17இல் பதிவிடுகிறார்.

4. அவருக்குள் ஜீவன் இருந்தது :- 
   இது மேலும் அந்த வார்த்தையானவர் கடவுள் என்பதை நிருவுகிறது. இவரே நம் தேவன். இந்த தேவன் உயிருள்ளவர் (ஜீவனுள்ளவர்). இவரே நம் எல்லாரையும் உண்டாக்கினார் என்று முந்தைய வசனங்களில் பார்த்தோம். நமக்கு ஜீவ சுவாசத்தை ஊதினவரும் இவரே. சுவாசிக்கும் யாவுக்கும் ஜீவன் பகிர்ந்தளித்தவரும் இவரே, கல்லும் மண்ணுமான மனித கைவேலையான விக்கிரகங்கள் கடவுள் அல்ல. கடவுள் உயிருள்ளவர். ஆம். வார்த்தையானவராகிய நம் தேவன் உயிருள்ளவர் (ஜீவனுள்ளவர்). இந்த உயர்ந்த சத்தியத்தை கிறிஸ்து பிறப்பதற்க்கு முன் வாழ்ந்த யோபு தன் மீட்பர் உயிரோடிக்கிறார் என்று நன்கறிந்தவராக இருந்தார் (யோபு 19:25). சரீரத்திற்க்கும் ஆத்துமாவிற்க்கும் ஜீவன் கொடுக்கவல்ல ஒரே தேவன் இவரே. மனுஷன் அக்கிரமங்களினாலும் பாவத்தினாலும் மரித்தவனாய் இருந்தான். ஆனால் கிறிஸ்து இயேசுவை நம்புகிறவனுக்கு ஜீவனின் அதிபதியாகிய ஆண்டவர் ஜீவனைக்கொடுத்து அவனை உயிர்ப்பிக்கிறார். இப்படி அந்த ஜீவன் மனுஷனுக்கு ஒளியாய் இருந்தது.

5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது - 
   இருளிலே இருந்த ஜனங்கள் இந்த பெரிய வெளிச்சத்தைக் காணத்தக்கதாக இந்த பூமியில், பெத்லேகேம் என்னும் ஊரில், ஏரோது அரசாண்ட காலத்தில் ஒரு கன்னிகையின் மகனாக தேவ குமாரன் பிறந்தார். அவர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர். அவரைக்குறித்த தீர்க்கதரிசனமே, "நான் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன்." (சங் 132:17). எவ்வளவு துள்ளியமான தீர்க்கதரிசன நிறைவேறுதல் இது!  ஆம், ஆண்டவராகியே இயேசு கிறிஸ்துவே யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் வாக்களிக்கப்பட்ட ஒரே மேசியா என சுவிஷேசகனாகிய யோவான் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து எழுதுவதில் சோரவில்லை. இந்த மெய்யான ஒளியினடத்தில் இருளிற்கு வேலை இல்லை. ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? ஒளி வந்த இடத்தில் இருள் விலகுவதுபோல, இந்த ஒளி எவனுடைய உள்ளங்களில் பிரகாசிக்கிறதோ அங்கே இருள் குடிகொள்வதில்லை. நம்பிக்கையூட்டும் இந்த வசனங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக!

(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
  

إرسال تعليق

أحدث أقدم

نموذج الاتصال