எது சீர்திருத்த நாள்?
ஒரே நாளில் நடந்த ஒரு நிகழ்வு உலகையே மாற்றியது என்றால் அந்த நாள் அக்டோபர் 31, 1517. ஒரு துறவியும் அறிஞருமான சகோதரர் மார்ட்டின் லூதர், ரோமன் கத்தோலிக்க சபையான தனது சபையுடன் பல ஆண்டுகள் போராடினார். கத்தோலிக்க சபையில் முன்னெப்போதும் இல்லாத சாத்தானிய விற்பனை ஊடுருவியது. அதாவது பணம் கொடுத்து துண்டு சீட்டு (டிக்கெட்) வாங்கினால் கடந்த கால பாவத்தின் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்றும், சுத்திகரிப்பு ஸ்தலத்திலிருந்து விரைவில் மோட்சம் செல்லலாம் என்றும், பாவ மன்னிப்பு வியாபாரம் கொடி கட்டி பறந்தது. இதனைக் கண்டு அவர் பெரிதும் கலக்கமடைந்தார். இதில் சில கதா பாத்திரங்கள் வருகிறார்கள்.
முதலாவதாக, இளம் பிஷப்பான ஆல்பர்ட் (மெயின்ஸின்). சபை சட்டப்படி மிகவும் இளமையான பிஷப். அவர் இரண்டு ஆயர்களின் மேல் ஆயராக இருந்ததோடு மட்டுமல்லாமல், மைன்ஸ் மீது கூடுதல் பேராயர் பதவியையும் அவர் விரும்பினார். இது சபை சட்டங்களுக்கு எதிரானது. எனவே ஆல்பர்ட் ரோமில் உள்ள போப் லியோ எக்ஸ் அவர்களிடம் முறையிட்டார். டி மெடிசி குடும்பத்தில் இருந்து, லியோ எக்ஸ் அதிக நிதி ஆதாரங்களை பெற்று வந்தார். ஆகையால், ஆல்பர்டின் முறையீட்டுக்கு உடனே ஒப்புதல் அழித்தார். கலைஞர்கள் மற்றும் சிற்பிகளான ரபேல் மற்றும் மைக்கேலேஞ்சலோ உள்ளே வருகிறார்கள்.
ஆல்பர்ட் (மெயின்ஸின்), போப்பாண்டவரான லியோ எக்ஸின் துணையுடன் புனித விற்பனை என்ற பெயரில் அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டார். போப்பாண்டவரான லியோ எக்ஸும் இதன் மூலமாக வரும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராக இருந்தார். ஆல்பர்ட், போப்பாண்டவரின் ஆசீர்வாதத்துடன், கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களுக்கு மன்னிப்பை துண்டுச்சீட்டாக விற்க்கத்தொடங்கினார். இவை அனைத்தும் துறவி மார்ட்டின் லூதரை மனமுடையச் செய்தன. சொர்க்கத்திற்கு செல்லும் வழியை நாம் காசுக்கு வாங்க முடியுமா? லூதர் இதற்கெதிராக பேச ஆரம்பித்தார்.
ஆனால் ஏன் அக்டோபர் 31 சீர்திருத்த நாள்? நவம்பர் 1 சபை காலண்டரில் 'அனைத்து புனிதர்களின் தினம்' ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது. நவம்பர் 1, 1517 அன்று, லூதரின் சொந்த நகரமான விட்டன்பெர்க்கில் புதிதாகப் பெறப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு ஒரு பெரிய கண்காட்சி காட்சிப்படுத்தப்படும். யாத்ரீகர்கள் எல்லா இடங்களிலிருந்தும் அந்த சுரூபங்களைக் காண படையெடுத்து வருவார்கள். இப்படி வந்து இவர்கள் சுத்திகரிப்பு ஸ்தலம் என்னும் இடத்தில் இருந்து 100 ஆண்டுகளோ அல்லது 1000 ஆண்டுகளோ விடுதலை பெற்று, கொடுக்கும் பணத்திற்கேற்ப சீக்கிரம் மோட்சம் அடைய முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. லூதரின் ஆன்மா இவைகளைக்கண்டு மேலும் துக்கமடைந்தது. இவை எதுவுமே அவருக்கு வேதத்தின்படி சரியாகத் தோன்றவில்லை. மாறாக வேத போதனைகளுக்கு நேரெதிராக இருந்தது.
"சீர்திருத்த நாள் என்பது இயேசு கிறிஸ்துவின் மீட்பின் நற்செய்தி கத்தோலிக்க சபையிலிருந்து விடுதலையடைந்து இருளில் இருந்த ஜனத்துக்கு ஒளிவீசிய மகிழ்ச்சியான அழகான தருணத்தைக் கொண்டாடுகிறது."
மார்ட்டின் லூதர் என்ற அறிஞர், ஒரு சிறகை கையில் எடுத்து, அதைத் தனது மை பாட்டிலில் நனைத்து, 1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது 95 ஆய்வறிக்கைகளை எழுதினார். இந்த 95 ஆய்வறிக்கைகள் தனது தேவாலயத்தில் ஆன்மதேடலில் உள்ள தனது சக சகோதரர்களிடையே விவாதத்தைத் தூண்டும் விதமாக உருவாக்கப்பட்டது. சபையும் உலகமும் (ஆட்சி) ஒன்றாக பயணிக்கமுடியாது என்பதை வலியுருத்தியது. சபையின் கவலைக்கிடமான நிலையை சுட்டிக்காட்டும் விதமாகவும், சபையின் விசுவாசம் சோதிக்கப்பட்டு மறுமலர்ச்சி வர வேண்டும் என்னும் அடிப்படையிலும் அந்த 95 ஆய்வறிக்கைகள் வடிவமைக்கப்பட்டது.
லூதரின் 95 ஆய்வறிக்கைகளில் ஒன்று, "தேவாலயத்தின் உண்மையான பொக்கிஷம் இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசமேயாகும்" என்று எளிமையாக அறிவிக்கிறது. அதுவே சீர்திருத்த நாளின் கருப்பொருள். தேவாலயம் சுவிஷேசத்தின் பார்வையை இழந்துவிட்டது, ஏனென்றால் அது நீண்ட காலத்திற்கு முன்பே கர்த்தருடைய வார்த்தையின் பக்கங்களில் மேல் பாரம்பரியங்களை அடுக்கடுக்காக வைத்து வேதாகமத்தை அழித்துவிட்டது. இந்த வீணான பாரம்பரியங்கள், கடவுளின் பாதையில் மனிதன் செல்ல மனிதன் மீது கிரியைகள் என்ற பார சுமைகளை ஏற்றியது. அக்கால பரிசேயர்களும், இடைக்கால ரோமன் கத்தோலிக்க மதமும் ஒரேவிதமான மூட நம்பிக்கைகளையே போதித்தது. "என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது" என்று கிறிஸ்து தாமே சொல்லவில்லையா? ஆனால் கத்தோலிக்க சபையின் பாரம்பரியங்கள் மனிதன் மீது வீணான சுமைகளையே ஏற்றியது. சீர்திருத்த நாள் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் நற்செய்தியின் அழகை மகிழ்ச்சியாக கொண்டாடும் நாள்.
சீர்திருத்த நாள் என்றால் என்ன? நற்செய்தியின் ஒளி இருளில் இருந்து வெளிவந்த நாள். புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் தொடங்கிய நாள். மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், ஜான் நாக்ஸ் போன்ற பல சீர்திருத்தவாதிகள், விசுவாசம் மற்றும் வாழ்க்கைக்கான ஒரே உயர்ந்த அதிகாரமாக வேதம் மட்டுமே இருக்கிறது என்று கூறி மறுமலர்ச்சியைக் கொண்டுவர உந்திய நாள். மீட்பின் நற்செய்தியை அரக்கர்களின் கைகளிலிருந்து மீட்டு சபைக்கு கொடுத்த நாள். கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக, கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே தேவநீதியைப்பெற முடியும் என்ற மீட்பின் நற்செய்தி மக்களை சென்றடைந்தது. பின் பாமாலைகள் எழுதப்பட்டது. சாமானிய மக்கள் சபையாக கூடி தேவனைப் போற்றி கெம்பீரித்து பாடி மகிழ்ந்தனர். பாடல், சபை கூடி வருதல், பிரசங்கம் போன்றவற்றின் மையம் கிறிஸ்துவின் சுவிஷேசமாகவே விளங்கியது. இப்படி இந்த நாள் இறையியலிலும், கலாச்சாரத்திலும், சபையிலும் ஒரு மிகப்பெறிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது.
எனவே சீர்திருத்த தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நாள் தேவன் எழுப்பிய சீர்திருத்தவாதிகளை நினைத்து, அவர்களை எழுப்பிய தேவனுக்கு எண்ணடங்கா நன்றிகளை செலுத்தும் நாளாக இருக்கிறது.
• உங்கள் கைகளில் தவளும் வேத புத்தகத்திற்காக நன்றி சொல்லுங்கள்.
• அந்த வேத புத்தகத்தை நீங்கள் வாசிக்க இருந்த தடை நீக்கப்பட்டதற்காக நன்றி செலுத்துங்கள்.
• அந்த பரிசுத்த வேத புத்தகத்தை வாசித்து புரிந்துகொள்ள கிருபை கிடைத்துள்ளதற்காக நன்றி செலுத்துங்கள்.
• சத்தியமுள்ள சபை கிடைத்ததற்காக நன்றி செலுத்துங்கள்.
• விஷேசமாக உங்கள் முதுகில் சுமத்தப்பட்ட மனுஷனுடைய வீணான பாரம்பரியங்கள் தூக்கியெரியப்பட்டு சுவிஷேசத்தின் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நாம் பெற்றுக்கொண்ட இந்த நல்ல சுவிஷேசத்தை தன்மை மாறாதபடி கிறிஸ்துவின் மூலமாக இலவசமாக, கிருபையாக விசுவாசத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கும் இரட்சிப்பின் செய்தியை பறைசாற்ற வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை.
தேவனுக்கே மகிமை!
#வேதம்மட்டுமே #விசுவாசம்மட்டுமே #கிருபைமட்டுமே #கிறிஸ்துமட்டுமே #தேவனுக்கேமகிமை
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக