சகரியா 13:7 || மேஜை சிந்தனை || சகோதர ஐக்கிய சபை ஞாயிறு ஆராதனை செய்தி
சகரியா 13:7
"பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை விட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன். "
பட்டயமே :- பட்டயம் பாவத்தின் மீதுள்ள தேவனுடைய நியாயமான கோபத்தைக்குறிக்கிறது.
என் மேய்ப்பன்மேலும் :- தேவன் இஸ்ரவேல் தேசத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டுள்ள ஏதோ ஒரு மேய்ப்பனை இங்கு குறிப்பிடவில்லை. மாறாக என்னுடைய மேய்ப்பன் என்று குறிப்பாக ஒருவரை சுட்டிக்காட்டுகிறார். இந்த வசனத்தை முறையாக படிக்கும்போது இது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவே சகரியா 11:7 அமைந்துள்ளது. (சங்கீதம் 23:1)
என் தோழனாகிய புருஷன் :- இது தேவனுடைய குமாரன் மனிதனாக வரப்போகிறார் என்பதை திட்டமும் தெளிவுமாக தீர்க்கதரிசனமாக அறிவிக்கும் விதமாகவே உள்ளது. மற்ற மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது "என் அருகில் நிற்க்கிற புருஷன்" என்று வாசிக்கமுடிகிறது. பிதாவாகிய தேவனுக்கு மிக அருகில் நிற்பவர் தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவே. பிதாவுக்கு சமமானவரும் பிதாவுக்கு சரிநிகராக நிற்பவரும் தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவே. பார்க்க: தானியேல் 3:25
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு :- நம்முடைய பாவங்கள் தேவனுடைய நியாயமான கடுங்கோபத்தை சம்பாதித்தது. தேவனால் வெறுக்கப்படவேண்டியவர்களும் அறுவருக்கப்படவேண்டியவர்களுமாகிய நம்மை அந்த பாவத்திலிருந்தும், பாவத்தின் தண்டனையிலிருந்தும் காப்பாற்றும்படியாக, பாவமே செய்யாதவரும், பரிசுத்தம் நிறைந்தவரும், பிதாவுக்கு மிக அருகில் நிற்பவருமாகிய தம் ஒரே பேறான செல்ல குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீதாக அந்த கடுங்கோபத்தை திருப்புகிறார். "இந்த அன்புக்கீடு நல்க நான் தகாதவன்" என்ற பாடல் வரிகளே மனதிலிருந்து எழும்புகிறது.
மேய்ப்பனை வெட்டு :- தானியேல் 9:26 இல் மேசியா சங்கரிக்கப்படுவார் என்று வாசிக்கிறோமே. நமது பாவமும், நமது அக்கிரமங்களும் தேவகுமாரனை சிலுவையில் கிடத்தியது. தேவகுமாரனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம் பாவமெல்லாம் சுமத்தப்பட்டதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் இயேசு செய்ததாகவே கணக்கில் என்னப்பட்டு தேவகோப கலசம் சிலுவையில் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதை அவரும் பெற்றுக்கொண்டார். பிதா, பாவிகளும் நீசர்களுமாகிய நம்மைக் காப்பாற்ற தம் சொந்த குமாரனை வெறுக்கவும் துணிந்தார். நம் மீது வைத்த நேசத்தின் ஆழம் இவ்வளவு பெறிதா! இது விந்தையான அன்பு, எங்கும் காண இயலா அன்பு. தேவகுமாரன் இயேசு கிறிஸ்துவும் நம்முடைய மீட்பின் நாளைக்கண்டு சந்தோசித்து அந்த கலசத்தை சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டார்.
அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும் :- கெத்சேமனே பூங்காவில் கூடியிருந்த சீஷர்கள், இயேசு கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுகையில் பயந்து சிதரிப்போவார்கள் என்று இங்கே தீர்க்கதரிசனமாக முன்னுறைக்கிறார். இது எழுதப்பட்ட ஆண்டு கி.மு 520. 520 ஆண்டுகளுக்கு பின் அவ்வளவு துள்ளியமாக இந்த தீர்க்கதரிசன வசனம் நிறைவேறுதலை (மத் 26:31) நாம் காண்கிறோம்.
ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன் :- ஆனாலும் ஆண்டவர் அவர்களை வெறுத்துவிடவில்லை. அவர்களை அவர் எப்பொழுதும் தம் பிள்ளைகளாகவே பார்க்கிறார். சீஷர்கள் (அ) கிறிஸ்தவர்கள் மீது கர்த்தர் இப்பொழுது இரக்கத்தின் கரத்தை வைக்கிறார்; கிருபையின் கரத்தை வைக்கிறார்; அன்பின் கரத்தை வைக்கிறார். ஆம், அன்பின் நிமித்தமாக சிட்சையின் கரத்தையும் கூட வைக்கிறார். அவர்களுக்கு ஆசி வளங்கி அவர்கள் மூலமாக என் இரட்சிப்பின் சுவிஷேசத்தை பூமி பந்து முழுவதும் கொண்டு செல்வேன் என்பதையே இங்கு ஆண்டவர் கூறுகிறார்.
இந்த தீர்க்கதரிசன வசனத்தை வாசித்து, என் ஆண்டவரின் காலத்தில் மிகத்துள்ளியமாக இந்த வசனங்கள் நிறைவேறுவதையும் பார்க்கும்போது, இயேசுவே என்னை மீட்க ஆண்டவர் அனுப்பிய மேசியா என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக