பிள்ளைகளுக்கு எதை விட்டுப்போவது? C.H. Spurgeon
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான். அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். (நீதி.20:7).
நம் குடும்பத்தினரைக் குறித்து நாம் கவலைப்படுவது இயற்கையே. ஆனால் அதை நம் நடத்தையைச் சரிப்படுத்துவதைக் குறித்த கவலையாக்கினால் நாம் ஞானம் உள்ளவர்கள் ஆவோம். ஆண்டவர் முன் நாம் உத்தமர்களாய் நடந்தால் நம் பிள்ளைகளுக்கு ஏராளமான சொத்துக்களை விட்டுப் போவதைவிட அவர்களை அதிகமாய் ஆசீர்வதிக்கிறவர்களாய் இருப்போம். ஒரு தகப்பனின் தூய வாழ்க்கையே அவன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் பெருஞ்சொத்தாகும்.
நேர்மையான மனிதன் தன் முன்மாதிரியைத் தன் பின் சந்ததியாருக்கு விட்டுச் செல்கிறான். அது உண்மையான செல்வச்சுரங்கமாகும். எத்தனை எத்தனையோ பேர் வாழ்க்கையில் தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் பெற்றோரின் முன்மாதிரியேயாகும் என்று சொல்லக் கூடும்!
அப்படிப்பட்ட தகப்பன் தன் நன்மதிப்பையும் விட்டுச் செல்கிறார். நம்பக்கூடிய ஒருவரின் பிள்ளைகள் என்றாலோ, பெரும் வியாபாரியின் பிள்ளைகள் என்றாலோ மக்கள் நம்மை மதிப்பார்கள். தங்கள் குடும்பத்தின் நற்பெயரைப் பேணிக்காக்க வாலிபர் கவனமாயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் பிள்ளைகளுக்காகத் தாம் செய்த வேண்டுதல்களையும் ஜெபங்களைக் கேட்கும் ஆண்டவரின் ஆசீர்வாதங்களையும் விட்டுச் செல்கிறார். இவற்றினால் நம் பிள்ளைகள் சலுகைகள் பெறுகிறவர்கள் ஆகிறார்கள். நாம் மரித்த பின்பும் தேவன் அவர்களை இரட்சிப்பார். அவர்கள் இப்போதே இரட்சிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
நம் நேர்மையே நம் பிள்ளைகளைக் தேவன் இரட்சிப்பதற்கான வழியாய் இருக்கலாம். நம் நம்பிக்கை உண்மையானதென்பது நம் வாழ்க்கையினால் மெய்ப்பிக்கப்பட்டால் அவர்களும் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களாய் இருப்பார்கள். ஆண்டவரே இந்த வசனம் என் குடும்பத்தாரில் நிறைவேறக் கிருபை செய்யும்.
கருத்துகள்
கருத்துரையிடுக