உள்ளே வா! - பொன்.வ.கலைதாசன்
உள்ளே வா!
ஏன் நண்பா
இந்த வேகாத வெய்யிலில்
கூரைமேல் ஏறி
கஷ்டப்படுகிறாய்?
உள்ளே வா!
எங்களுக்குச் சமமாக உட்காரு!
எங்களைத் தொட்டுப்பேசு!
எங்களுடன் அமர்ந்து உணவருந்து!
எங்கள் வேதத்தைக்
கையால் தொடு!
உனக்குப் புரிகிற
மொழியில்தான் இருக்கிறது,
அதை நீயே வாசித்துப்பார்;
அல்லது நாங்கள் வாசிப்பதைச் செவிகொடுத்து கேட்டுக்கொள்!
எங்கள் நம்பிக்கையைக்
கேள்வி கேள்!
எங்கள் நடைமுறையை
ஆய்வுக்கு உட்படுத்து!
எங்கள் திருச்சபைக் கூடத்தில்
எங்கும் நுழைந்திடு!
எங்களைச் சகோதரா என்றும்
சகோதரி என்றும்
நீ அழைத்திடு;
நாங்களும் உன்னைச்
சகோதரா என்றே அழைப்போம்,
சமமாகவே நடத்துவோம்!
கடைசிவரை நீ
இப்படி ஏவலாளாகவே
இருக்காதே;
நீ விரும்பினால்
பைபிளை முறைப்படி கற்று
இந்தத் திருச்சபைக்கே
போதகராகிவிடு!
நானும் அவ்வாறு
போதகன் ஆனவன்தான்!
ஏன் இதையெல்லாம்
சொல்கிறேன் என்றால்,
இந்த வாய்ப்புகள்
எதையும் உன் மதம்
உனக்குத் தராது!
திருச்சபைக் கூடத்தின்
கூரைவரை
ஏறமுடிந்த உன்னால்
உன் கோயிலின்
கருவறைக்குள் நுழையமுடியாது!
அதனால்தான் அழைக்கிறேன்,
திருச்சபைக்குள்ளே வந்துவிடு!
திருந்திவாழ உனக்கு
இன்னும் ஒரு வாய்ப்பு
இயேசு தருகிறார்;
ஏனெனில்,
இயேசு உன்னை
இன்னும் நேசிக்கிறார்!
- பொன்.வ.கலைதாசன்
திருப்பெரும்புதூர்
கருத்துகள்
கருத்துரையிடுக