நியாயப்பிரமாணம் அதிக பாரம்
வேத பகுதி மாற்கு 2:23-28
இயேசு தம் சீஷர்களை வயல்வழியாக கூட்டிச்செல்கிறார். இது சங்கீதம் 23ஆம் அதிகாரத்தை எனக்கு நியாபகப்படுத்துகிறது. நல்ல மேய்ப்பர் இயேசு நாதர் தம் பிள்ளைகளை பசும்புல்வெளியில் மேயவிடுகிறார். அவர்கள் வயலைக் கடந்துபோகையில் சாப்பிடுவதற்காக கதிர்களை பிடுங்குகிறார்கள். இதைப்பார்த்து பொருக்காத பரிசேயர்கள், இயேசுவிடம் சீஷர்களை குறைசொல்கிறார்கள். யூத மத சம்ப்ராதயத்தில் ஓய்வுநாளில் சாப்பிட வயலில் கதிர் பொருக்குவது கட்டளையை மீறுவதாகும். இதற்கும் கடவுள் மோசேயிடம் கொடுத்த நியாயப்பிரமானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நியாயப்பிரமானத்தின்படி வயலின் உரிமையாளன் வயலின் விளைச்சலை ஓய்வுநாளில் பார்வையிடுவதும் அறுவடை செய்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. (யாத் 34:21) ஆனால் வயலில் பிரவேசிக்கிற அந்நியன் தன் பசிக்காக கதிர்களை பொறுக்குவது அவனுடைய உரிமை. அது நியாயப்பிரமானத்தை மீறுவதல்ல. (லேவி 23:22, உபா 23:25)
அப்படியானால் ஏன் பரிசேயர்கள் இயேசுவிடம் இதைக்குறித்து குற்றம் சாட்டுகிறார்கள்?
யூத மதத்தில் கடவுளின் நியாயப்பிரமானத்தைத் தாண்டி சுமப்பதற்கரிய அநேக கட்டளைகள் சுமத்தப்பட்டது. (மத் 23:4) யூத மதத்தில் தள்முத் என்று ஒரு பெரிய புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தில் ஓய்வுநாள் குறித்து 24 அத்யாயங்கள் உள்ளன. அதில் ஒரு அத்யாயத்தைப் படித்து முடிக்கவே இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று தன் இஷ்டம்போல அநேக பாரமான கட்டளைகளை பரிசேயர்கள் சுமத்தினார்கள். ஆகவே தான் இயேசு சொன்னார், "சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். (மத் 23:4)"
உதாரணத்திற்கு தள்முத் கூறிய சில ஓய்வுநாள் விதிமுறைகள்:
- வீட்டில் இருந்து 3000 அடிக்கு மேல் செல்வது பாவம். ஓய்வுநாளுக்கு முந்தைய நாளில் 3000 அடிகள் தள்ளி ஓரிடத்தில் உணவு வைத்திருந்தால், உணவு வைக்கப்பட்ட இடம் வீடாக கருதப்பட்டு அதிலிருந்து இன்னும் 3000 அடிகள் பயனிக்கலாம். ஒரு தெருவிலோ சாலையிலோ நூலோ கயிரோ கட்டப்பட்டிருந்தால் அதை வீட்டின் எல்லையாக கருதி, அதிலிருந்து மேலும் 3000 அடிகள் பயனிக்கலாம்.
- உளர்ந்த அத்திப்பழத்தின் எடையைவிட அதிகமான எடையை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது.
- தையல்காரன் ஒரு ஊழியையோ, எழுத்தாளர் எழுதுகோளையோ, மாணவன் புத்தகத்தையோகூட எடுத்துச்செல்லக்கூடாது. இரண்டு எழுத்தை எழுதுவதற்க்கு தேவையான மையைவிட அதிகமான மையை சுமந்துசெல்லக்கூடாது.
- பெண்கள் முகம்பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கக்கூடாது. பார்த்தால் ஒருவேளை தலையில் வெள்ளைமுடி தென்பட்டால் அதை நீக்கமுயற்ச்சிப்பார்கள்.
- தீக்கொழுத்துவதும் அனைப்பதும் கூடாது.
- குளிர்ந்த நீரில் வெண்ணீர் ஊற்றலாம். வெண்ணீரில் குளிர்ந்த நீர் ஊற்றக்கூடாது.
- முட்டையை வேகவைக்கக்கூடாது. சுடுமணலில் இட்டும் வேகவைக்ககூடாது.
- எந்த ஒரு பொருளையும் வாங்கவோ விற்கவோ கூடாது.
- குளிக்கக் கூடாது. குளித்தால் ஒருவேளை தரையில் தண்ணீர் சிந்தும். பின் அதைத் துடைக்க நேரிடும்.
இப்படிப்பல சுமப்பதற்கறிய அநேக கட்டளைகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். ஆகவேதான் இயேசு சொன்னார், "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இலைப்பாருதல் தருவேன்." என்று.
இன்றைய கிறிஸ்தவத்திலும் சில லீகலிஸ்டிக் போதகர்கள் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பிடிக்காத காரியங்களை கட்டளைகளாக விசுவாசிகளின் தலையின் மீது ஏற்றுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது. இதை கண்டித்து பேதுரு "இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?" என்று அப் 15:10 இல் பேசுவதைப் பார்க்கிறோம்.
எனவே கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் வருபவர்களின் பாரங்களை இரக்கிவைக்க உதவவேண்டுமே தவிற, மேலும் மேலும் கட்டளைகளை தினிக்கும் அதிகப்பிரசங்கித்தனத்தை செய்யக்கூடாது. விடுதலையாக்கும் சத்தியத்தை போதிக்கவேண்டுமே தவிற, பாரமான நுகங்களை ஒருவனின் கழுத்தில் ஏற்றக்கூடாது. (யோவான் 8:32, மத் 11:30)
மோட்ச யாத்திரை புத்தகத்தில் கிறிஸ்டியான் வழிமாறி ஒரு லீகலிஸ்டின் பேச்சைக்கேட்பான். பின் இவாஞ்சலிஸ்ட் என்ற பாதைகாட்டும் மனிதர் வந்து அந்த லீகலிஸ்ட் என்ற மனிதர் யார் என்று பின் வருமாறு விளக்குவார், "லீகலிஸ்ட் என்ற பெண்ணும் அவளின் பிள்ளைகளும் அடிமையாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உன்னை விடுதலையாக்கக்கூடும். ... வேர்ல்ட்லி வைஸ்மேன் ஒரு அந்நியன், லீகலிஸ்ட் ஒரு ஏமாற்றுப்பேருவளி."
(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)
கருத்துகள்
கருத்துரையிடுக