பால் புதுமையினரின் பரிதாபங்கள் — ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்

தகவல் தொழில்நுட்ப அறிவு பெருகிவரும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் LGBTQ என்னும் சீரழிவுக் கருத்தியல். இவர்களைத் தமிழில் பால் புதுமையினர் எனலாம். யார் இந்தப் பால் புதுமையினர்?

பால்புதுமையினரின் தொன்மம்

வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமானால் கடவுளுக்குப் பிடிக்காத செயல்களை மனிதர்கள் தொடர்ச்சியாகச் செய்வதன்மூலம் கடவுளுக்கு எரிச்சலூட்டுவதை அறியமுடியும். கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்து அவர்களுக்குள் ஒரு திருமண உறவை ஏற்படுத்துவதை திருவிவிலியத்தின் முதல் புத்தகத்தில் பார்க்கிறோம். கடவுள் ஏற்படுத்திய இந்த ஒழுக்கநீதியை மறுதலித்து அதற்கு நேர்மாறாக நடந்துகொள்ளும் கூட்டத்தினர்தான் இவர்கள்! இக்காலத்தில் மட்டுமன்று, ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் தங்கள் பாலின வரையறைகளை மீறிய உறவுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்! அதை நியாயப்படுத்தவே தற்போது அமைப்பாகத் திரண்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயரே LGBTQ!

பால் புதுமையினர் - ஒரு விளக்கம்
LGBTQஎன்பது ஓர் ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். L - லெஸ்பியன்: பெண் ஈர்ப்பு கொண்ட பெண்கள்; G - கே: ஆண் ஈர்ப்பு கொண் ஆண்கள்; B - பைசெக்சுவல்: இருபாலினர்மீதும் ஈர்ப்பு கொண்டவர்கள்; T - ட்ரான்ஸ் ஜெண்டர்: தன் பாலினத்தை மாற்றிக்கொள்பவர்கள். Q - குயர்: தங்கள் பாலினத்தைப் பற்றிய தெளிவு அற்றவர்கள். இந்த அவலம் வெறும் ஐந்து எழுத்துகளில் முடிந்துவிடுவதில்லை. இதன் தொடர்சியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கின்றனவாம். வலதுசாரியினர் இப்பொழுது இந்த சமூகத்தினருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.  
LGBTQ சமூகம் இயற்கையானதல்ல, ஏன்? இதன் நடைமுறைச் சிக்கல்கள் என்ன? கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் LGBT ஏற்புடையதா? LGBT சமூகம் மனம் திரும்பவேண்டுமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். 

இது ஒரு மனப்பிறழ்வுக் கூட்டம்
ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருமை மாதமாக எண்ணப்பட்டு வானவில் கொடியேந்தி ஊர்வலம் நடப்பதை நாம் பார்க்கிறோம். இந்தப் பெருமைநடை (Pride Walk) ஊர்வலத்தில், தன்னை மாற்றுப் பாலினத்தினராக எண்ணிக்கொள்ளும் ஒரு பாலினர் கலந்துகொள்வர். இதில் மேற்கத்திய நாடுகளில் ஒருபடி மேலே சென்று, நான் என்னை ஒரு தவளையாக உணர்கிறேன், நான் என்னை ஒரு நரியாக உணர்கிறேன் என்போர் பலர் கலந்துகொள்வதைப் பார்க்கலாம். இவர்களுடைய குரல் யாதெனில், என் பிறப்பு என்னைத் தீர்மானிக்கக்கூடாது, நான் யார் என்பதை நானே தீர்மானிப்பேன் என்பதே. அப்படியானால் இயற்கையாக கடவுள் கொடுத்த பாலுணர்வை ஏற்றுக்கொள்ள மறுத்து தனக்கு இஷ்டமான பாலுணர்வைத் தெரிவுசெய்ய முனைகிறார்கள். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின்மேலோ, ஓர் ஆணுக்கு இன்னோர் ஆணின்மேலோ பாலியல் ஆசை வருவது இயற்கையல்ல. இவை கடவுளின் படைப்பின் இலக்கணத்தை மீறுவது, அதாவது பாவம் ஆகும்! இதை பைபிள்: "இச்சைரோகம்" (ரோகம் = வியாதி), "அசுத்தம்" "அவமானம்", "அவலட்சணம்" ஆகிய வார்த்தைகளைக் கொண்டு கண்டிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் சிறந்த மனநல மருத்துவரை அணுகவேண்டும். இவை மனநலம் சார்ந்த பிரச்சனையல்ல என்று வாதிடுவோர் பெரும்பாலும் உணர்ச்சிவசமான கதைகளைத்தான் கொண்டுவருகிறார்களே அன்றி முறையான அறிவியல் காரணங்களைக் கொண்டுவருவதில்லை. ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது அதன் எழும்புகளும், உடல் பாகங்களும், தோல்களும் உருவாகின்றன. அவற்றின்மூலம் அந்தக் குழந்தை ஆண் (அ) பெண் என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருபோதும் ஒரு பெண்குழந்தை ஆணுறுப்போடும் ஓர் ஆண்குழந்தை பெண்ணுறுப்போடும் பிறப்பதில்லை. இன்னும் க்ரோமோஸோமை வைத்து இவற்றை அணுகினால்கூட "xy" என்ற க்ரோமோஸோமுடன் பிறக்கும் குழந்தை ஆண் என்றும் "xx" என்ற க்ரோமோஸோமுடன் பிறக்கும் குழந்தை பெண் என்றும் தீர்மானித்துவிடலாம். ஆணிற்குரிய எலும்புகளும், உடல் அங்கங்களும், க்ரோமோஸோமும் கொண்ட ஒருவர் வளர்ந்துவரும்பொழுது தன்னை பெண்ணாக உணர்வதும் மருதலையாக உணர்வதும் மனப்பிறழ்வே அன்றி வேறல்ல. ஓரினச் சேர்க்கையும் மனப்பிறழ்வே!

இவர்களால் ஏற்படும் சிக்கல்கள்
கழிப்பறையில் ஆரம்பித்து, பேருந்துப் பயணங்களில் நீண்டு, கோயில், குடும்ப விழாக்கள்வரை நம் அன்றாட நடைமுறை வாழ்வில் இருபாலினத்தில் ஒருவராகிய நாம் இந்த LGBTQ சமூகத்தால் அநேக நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்கிறோம்.
ஆணாகப்பிறந்தும் தன்னைப் பெண்ணாக உணரும் ஒரு நபர் பெண்கள் பயன்படுத்தும் அதே கழிப்பறையைத்தான் நானும் பயன்படுத்துவேன் என்கிறார். இவர்களுக்கென்று தனி கழிப்பறை கட்டினால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியே தனி கழிப்பறை பயன்பாட்டிற்கு வந்தாலும் இருபாலினத்தினர்மீதும் மோகம் கொண்ட ஒருவர் எந்த கழிப்பறையைப் பயன்படுத்தினாலும் மற்றவருக்குச் சிக்கல்தான்! இவர்களின் இந்த முறையற்ற பாலின உறவை நியாயப்படுத்த, "விலங்குகளைப் பாருங்கள்" என்று மிருகங்களின் பாலுறவை நமக்கான முன்மாதிரியாகக் காட்டுகிறார்கள்! மனிதர்கள் ஏன் விலங்குகளைப் பார்த்து வாழவேண்டும்? மனிதர்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதை இவர்கள் அறியாததாலேயே இந்தச் சிக்கல்!

சமூக அச்சுறுத்தல்
ஓர் ஆண் ஒரு பெண்ணின்மேல் (அ) ஒரு பெண் ஓர் ஆணின்மேல் தன் காதலைத் தெரிவிப்பதே இயற்கையான பாலின விருப்பமாகும். ஆனால் ஒரு பெண்ணிடம் அவளின் சிறுவயது பெண்தோழி திடீரென்று தன்னை ஓர் ஆணாக உணர்வதாகக் கூறி, பாலினமாற்று அறுவை சிகிச்சையையும் செய்துகொண்டு தன் காதலை வெளிப்படுத்தினால் என்னவாகும்? ஒன்று, நெருங்கிய தோழியைப் பிரிய மனமில்லாத இந்தச் சாதாரண பெண் அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்பாள் (அவ்வாறு ஏற்றுக்கொண்டாலும் அவர்களால் இயற்கையான பாலுறவு கொள்ள முடியாது!) அல்லது அந்தக் காதலை நிராகரிப்பாள். அப்படி நிராகரித்த ஒரு பெண்ணைக் கொடுரமாகக் கொன்ற சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பணிபுரிந்துவந்த ஐ.டீ ஊழியருக்கு நடந்தது. இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது:- LGBTQ சமூகத்தினர் தங்கள் சமூகத்தினுள் மாத்திரம் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில்லை. அவர்கள் பொது உலகில் நுழைந்து பொதுமக்களைச் சீண்டுகிறார்கள். இவர்கள் நம் குழந்தைகளைத் தங்கள் வலைக்குள் இழுக்க முயன்று நகரம் கிராமம் என எங்கும் சுற்றித்திரிகிறார்கள். LGBTQ சமூகத்தினரால் பரப்பப்பட்டுவரும் ஓர் ஆங்கிலப்பாடலில் பின் வரும் வரிகள் இடம்பெற்றுள்ளன:- "நாங்கள் உங்கள் குழந்தைகளை மாற்றுவோம", "மெல்ல மெல்ல, அமைதியாக சிரிது சிரிதாக", "நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் நடைபெறும் மாற்றத்தை உணர்வது கடினம்". ஆக LGBTQ சமூகத்தினரால் நம் குழந்தைகளுக்கு ஆபத்து! அதனாலேயே நாம் இவ்வாறாக எதிர்வினை ஆற்றவேண்டி உள்ளது!

இதுபற்றிய கிறிஸ்தவப் பார்வை

கிறிஸ்தவத்தில், படைப்பைக் குறித்த அடிப்படை நம்பிக்கை 'கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்' என்பதே. ஆம், ஆண் பெண் இரண்டே பாலினம்தான், மூன்றாம் பாலினம் என்பதே படைப்புக் கோட்பாட்டிற்கு எதிரானது! முதலில் ஆணைப் படைத்த கடவுள் அவனுக்குரிய வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணைப் படைத்து அவனுக்குக் கொடுக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் திருமண உறவின்மூலம் பலுகிப்பெருக வேண்டுமென்றும் கட்டளையிடுகிறார். (ஆதி 2:20,22) ஆக திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயானது. இதையே இயேசு கிறிஸ்து மறுபடியும் மேற்கோள் காட்டி உறுதிப்படுத்துகிறார். (ஆதி 2:24, மத் 19:4,5) 
மத் 19:4,5  "ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?" ~ இயேசு கிறிஸ்து


இவர்களின் பரிதாபநிலை

LGBTQ மட்டுமின்றி இந்தக் கடைசி நாட்களில் உலகம் நமக்குமுன் வைக்கும் பல்வேறு புதிய தத்துவங்கள் கடவுளின் நீதியுள்ள திட்டங்களுக்கு எதிரானவையாகவே உள்ளன. உண்மையில் இங்கு எதுவும் புதிதில்லை. பைபிள் சொல்கிறபடி, "முன் இருந்ததே இனிமேலும் இருக்கும், முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும், சூரியனுக்குக் கீழே புதுமையானது ஒன்றுமில்லை" (பிரசங்கி 1: 9) தகவல் தொடர்பு பெருகியுள்ளதால் இக்காலத்தில் இவை பரவலாகப் பேசப்படுகின்றன. இவையெல்லாம் தொன்றுதொட்டு நடப்பவையே.
கூடிவாழும் முறை, பலதார மணம், திருமணம் தாண்டிய கள்ள உறவு, வாடகைத்தாய், விபச்சாரம், வேசித்தனம் இப்படி எல்லாப் பாவங்களும் ஏற்கனவே இருப்பவைதான். இவற்றை பைபிள் மிகத் தெளிவாக வரையறுத்துக் கண்டித்து, இவற்றிற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது. ஆனால், இந்த உலகம் முன்வைக்கும் கவர்ச்சிகரமான முழக்கங்களால் விழுந்துபோய் வாழ்க்கையைத் தொலைப்பவர்களே இங்கு அதிகம்! இயல்பான திருமணத்திற்குட்பட்ட பாலுறவை அடிமைத்தனம் என்றும் வரம்பு மீறிய அருவருப்பான உறவுகளைப் பெருமை என்றும் நம்பும் போக்கு அபாயகரமானது பரிதாபத்திற்குரியது!

இதற்கான விவிலிய வழிகாட்டுதல்

ஒருவன் தான் உருவாக்கப்பட்ட அடையாளத்தில் திருப்தியின்றி அவற்றை மாற்ற முயல்வது, பெண் சுபாவம்கொண்ட ஆணாக இருப்பது, ஓரினச் சேர்க்கை ஆகியவையெல்லாம் வேதத்தின்படி பாவம். (1 கொரி 6:9) ஏறக்குறைய கி.மு 3900 ஆண்டுவாக்கிலேயே சோதோம், கோமோரா ஆகிய நகரங்களில் இது போன்ற அருவருப்பான பாவம் அதிகரித்தபோது, கடவுள் அந்நகரங்களை முழுமையாக அழித்ததையும் வேதத்தில் வாசிக்கிறோம். (ஆதி 19:24, யூதா 1:7)
நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, வேதம் சொல்கிறபடி நாம் எல்லோரும் ஏகமாய்க் கெட்டுப்போன பாவிகள். இதற்கு LGBTQ சமூகம் விதிவிலக்கல்ல. அவர்களையும் கடவுள் நேசிக்கிறார். எந்த ஒரு மனிதரும் பாவியாகவே மரித்து நரகத்தினுள் நுழைவதில் கடவுளுக்கு விருப்பமில்லை. மாறாக, அப்படிப்பட்டோரும் மனந்திரும்பி நித்திய வாழ்வடைவதையே கடவுள் விரும்புகிறார். (எரே 33:11) ஆம், சில பாவங்களை உடனடியாக விடமுடியாது. ஆனால் கடவுளின் பொருட்டு பாவத்தை வெறுத்தால் கடவுளின் துணையால் படிப்படியாக பாவ சுபாவத்திலிருந்து விடுபடலாம். இதுவே விவிலியத்தின் எளிய மற்றும் தூய வழிகாட்டுதல்!  பெண்ணியவாதியாகவும் லெஸ்பியனாகவும் இருந்து மீண்டுவந்தவர் எழுதிய ஒரு நூலை பரிந்துரைக்கிறேன் “Five Lies of Our Anti-Christian Age”.

இக்கட்டுரையைப் படித்ததும் இதை எழுதியவர்மீது பால்புதுமையினருக்குக் கோபம் எழலாம். ஆனால், இக்கட்டுரை அவர்களைக் குறைகூறும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. அவர்களின் பரிதாப நிலையை எடுத்துரைத்து அவர்கள் அதிலிருந்து மீண்டு தூய வழியில் வாழ்வதற்கான வழிகாட்டுதலை வழங்குவதே எங்கள் நோக்கம்!.

பரிதாப நிலையிலிருந்து பரிசுத்த வாழ்வுக்குள் வர இது ஓர் அழைப்பு!

(கல்லூரி மாணவராகிய ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ், கிறித்தவத் தற்காப்பியல் பரப்பில் களமாடிவருவதுடன் இளைஞர்களுக்கான விவிலிய ஆலோசனைகளை வழங்குவதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். சமூக ஊடகங்களிலும் இக்கருத்துகளை எழுதிவருகிறார்.)

பால் புதுமையினரின் பரிதாபங்கள் — ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்


கருத்துகள்