இராப்போஜனம் (அ) கர்த்தருடைய பந்தி என்றால் என்ன? இயேசுவின் உடலும் இரத்தமும்? 🤔

ஆதி திருச்சபை கிறிஸ்தவர்கள் வாரந்தோரும் சபைகூடி வந்து அப்பம் பிட்குதலில் உறுதியாய் தரித்திருந்தார்கள் என்று அப் 2:42இல் பார்க்கிறோம். இந்த கர்த்தருடைய பந்தியை கிறிஸ்தவர்கள் ஏன் கடைபிடிக்கிறார்கள் என்றால் இந்த பந்தியை ஏற்படுத்தியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் காட்டிக்கொடுக்கப்படும் முதல்நாள் இராத்திரியில் சீஷர்களோடு மேல்வீட்டரையில் இருக்கும்பொழுது இந்த பந்தியை ஏற்படுத்துகிறார். மாற்கு 14:!4இல் இயேசு கிறிஸ்து தாமே தம் சீஷர்களோடு பஸ்காவை உண்ணும்படி ஒரு அறையை ஏற்படுத்துமாறு கூறுகிறார். அப்படியானால் கர்த்தருடைய பந்திக்கும் பஸ்காவிற்கும் இனைபிரியா ஒற்றுமை ஒன்று உள்ளது என உனர்ந்துகொள்ள வைக்கிறது. 


பஸ்கா என்றால் என்ன என்பதை சுருக்கமாக கூறுகிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமையாக இருக்கும்பொழுது கர்த்தர் பல வாதைகளை எகிப்தின்மேல் அனுப்புகிறதையும், அதில் கடைசி வாதையாக தலைச்சன்பிள்ளை சங்காரம் நடப்பதையும் நாம் அறிவோம். அந்த வாதையின்போது, இஸ்ரவேல் ஜனங்கள் கடைபிடிக்கும்படி ஒரு காரியத்தை ஏற்படுத்துகிறார். பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை வீட்டிற்கொன்றாக தேர்ந்தெடுத்து அதை அடித்து, அதின் இரத்தத்தை வாசலின் நிலைச்சட்டத்தில் பூசி, வீட்டின் உள் அமர்ந்து அந்த ஆட்டுக்குட்டியை சமைத்து உண்ணும்படியாக கட்டளையிடுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுதலையடந்தபின்னும் இந்த காரியத்தை ஒரு விழாவாக வழிவழியாக கடைபிடிக்கும்படியும் இதன்மூலம் இஸ்ரவேலரை ஆண்டவர் அதிசயமாக விடுவித்ததை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக ஏற்படுத்துகிறார்  (யாத் 12:42).


மறதியின் பூமியில் வாழும் மனிதன் தன்னை மீட்டவரை மறந்துவிடாமல் இருக்கும்படியாக கர்த்தர் ஏற்படுத்தினதே இந்த பஸ்கா. இந்த பஸ்காவை சபை கர்த்தருடைய பந்தியாக கடைபிடிக்கிறது. "என்னை நினைவுகூறும்படி இதைச்செய்யுங்கள்"  என்று கூறி இந்த பந்தியை இயேசு ஏற்படுத்துகிறார். (1 கொரி 11:24,25)


ரோமன் கத்தோலிக்கர்கள் இந்த கர்த்தருடைய பந்தியைக்குறித்த குலப்பான உபதேசத்தை வைத்திருக்கிறார்கள். அதாவது, கர்த்தருடைய பந்தியில் கத்தோலிக்க பாதிரியார் அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து திருச்சபை பலிபீடத்தில் பிட்கும்பொழுதும் உயர்த்திக்காட்டும்பொழுதும் அப்பம் இயேசுவின் உடலாகவும், இரசம் இயேசுவின் இரத்தமாகவும் மெய்யாலுமே மாறுகிறது என்று போதிக்கிறார்கள். மட்டுமல்ல, பின் அந்த அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவுக்கு இனையாக நினைத்து அவைகளை நமஸ்கரிக்கிறார்கள். இது வேதத்தின்படி சரியா? நிச்சயம் இல்லை. 


காரணம் 1: யாத்திராகமம் 20இல் மோசேக்கு ஆண்டவர் கொடுத்த பத்து கட்டளைகளில் 3 முதல் 5 வசனங்களை வாசித்துப்பாருங்கள். தேவனுக்கு சமமாக எந்த ஒரு சொரூபத்தையும் செய்யக்கூடாது என்று ஆண்டவர் திட்டமும் தெளிவுமாக கட்டளையிடுகிறார். அப்படியிருக்க, ஒரு அப்பத்தையும் இரசத்தையும் கடவுளின் உடலாகவும் இரத்தமாகவும் நினைத்து வழிபடுவது முற்றிலும் வேதத்திற்கு எதிரானது.


யாத் 20:3-5

"3) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4)மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 5) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்."


காரணம் 2: "இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது" (1 கொரி 11:24) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே சொல்லியிருக்க, இது அடையாளச்சின்னம் மாத்திரம் என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்று ஒரு கேள்வி எழும்பும். 

பதில்: ஆண்டவர் இயேசுவின் பிரபலமான 'நானே' வாக்கியங்களில் "நானே உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்", "நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்", "நானே நல்ல மேய்ப்பன்" என்றெல்லாம் கூறியிருப்பது நாம் அறிந்ததே. (யோவான் 8:12, 10:7, 10:11) இதையெல்லாம் நாம் எளிதில் ஆவிக்குறிய மொழியில் புரிந்துகொள்வது போலவே கர்த்தருடைய பந்தியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆண்டவர் தெளிவாக கற்பித்தபடி, அவரை நினைவுகூறும் விதமாகவே இந்த பந்தியை நாம் கவணத்தில் கொண்டு கடைபிடிக்க வேண்டும்.


காரணம் 3: இயேசு ஒருமுறை மட்டுமே பலியாக வேண்டும். ஆனால், ரோமன் கத்தோலிக்கர்கள் ஒவ்வொரு சமயமும் இயேசுவின் உடலை பலிபீடத்தில் பலியாக செய்து உட்கொள்வதாக நம்புகிறார்கள். கன்மலையை நோக்கி பேசவேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிட்டிருக்க அதை இரண்டாம் முறை அடித்தபொழுது அது அவன் காணானை சென்று அடைய முடியாமல் பாதித்தது. அதுபோல "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே" (எபி 10:10) நாம் இரட்சிக்கப்பட்டிருக்க மீண்டும் மீண்டும் பலியிடப்படவேண்டும் என்று கத்தோலிக்கர்கள் போதிப்பது கிறிஸ்துவின் சிலுவை மரணம் போதாது என கற்பிப்பதற்கு சமம். அப்படி போதிப்பது பாவமும் கூட. (எபி 10:26)


காரணம் 4: அப்போஸ்தலர் நடபடிகள் 2ஆம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம். 

அப் 2:42 ->

ஆதி திருச்சபையில், சபைகூடி வந்து இயேசுவின் உடலை பிட்டு சாப்பிட்டார்கள் என்று வாசிக்கமுடிவதில்லை. மாறாக "அப்பம் பிட்குதலில் உறுதியாக தரித்திருந்தார்கள்" என்றே வாசிக்கிறோம். ஆக, கத்தோலிக்கர்கள் சொல்வதுபோல மேஜையில் வைக்கும் அப்பம் திருப்பலியில் இயேசுவின் உடலாக மாறுவது உண்மையென்றால், "சபைகூடிவரும்பொழுது, இயேசுவின் உடலை பிட்பதில் உறுதியாய் தரித்திருந்தார்கள்" என்றல்லவா எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆதி கிறிஸ்தவர்கள், மேஜையில் வைக்கும் அப்பத்தையும் இரசத்தையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து தங்களுக்காக சிலுவையில் பாடுபட்டு இரட்சித்த காரியங்களை நினைவுபடுத்தும் நியாபகச்சின்னமாகவே கர்த்தருடைய பந்தியை பார்த்தார்கள். 


எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் மனுஷருடைய சூதும் தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அழைகிறவர்களாய் இராமல், கர்த்தருடைய வார்த்தையில் உறுதியாய் தரித்திருப்போம். 

(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)


கருத்துகள்