சிலுவைமொழி வெண்பா - பொன் வ கலைதாசன்

ஆதி முதலிருந்த சோதி யவன்புவியின் 
மீதில் பிறப்பெய்தி மானுடர்க்காய் - நாதியற்று 
நீதி நிறைவேற்ற நீள்குருசில் தொங்குங்கால் 
ஓதியநற் சொற்க ளிவை.

1.மன்னிப்பு

ஏது புரிகின்றோம் என்றே புரியாமல்
தீது புரிவோர்தம் தீச்செயலை - தாதஎம் 
நீதி பரனேநீர் மன்னித் தருள்கென்றார் 
ஆதி முதல்வ னவர்!

2. மீட்பு

இறைவா உனதரசை எட்டுகையில் என்னை 
மறவாய் எனக்கள்வன் வேண்ட - பரத்தில் 
இருப்பாய் எனதருகில் இன்றேயென் றண்ணல் 
உரைத்தார் திருவாய் மலர்ந்து!

3.பரிவு

சாவு மரத்தினிலே செந்நீர் உகும்போதும் 
மேவு மரியவளின் மெய்காக்க - யோவானைக் 
கூவி யழைத்து மகனாக்கித் தாயாரின் 
நோவு களைந்தார் அறி!

4.ஏக்கம்

ஈசன் மனுக்குலத்தை மீட்கக் கொலைமரத்தில் 
நீச நிலையடைந்து தந்தையிடம் - பேசுகையில் 
என்னை உதறியதேன் தேவா எனுங்கதறல் 
கண்ணை நனைக்கும் குரல்!

5.தாகம் 
மேகம் கருத்திருக்க மேனி துடிதுடிக்க 
ஏகத் திருமைந்தன் மானுடர்க்காய்த் - தேகத்தில் 
சாகும் பொழுதாங்கே வேத உரைக்கேற்ப
தாகம் எனக்கென் றனர்!

6.வெற்றி

ஒடித்தார் பகையை இடித்தார் சுவரை முடித்தார்நம் மீட்பின் கணக்கை - அடித்தோர் 
குடிக்கக் கொடுத்தகடுங் காடி அருந்தி 
முடிந்ததென்று ரைத்தார் கிறிஸ்து!

7. நிறைவு

இப்புவியில் எந்தாய் எனக்களித்த ஊழியத்தை 
எப்பிழையு மின்றி நிறைத்திட்டேன் - அப்பாநான் 
ஒப்புவித்தேன் என்னாவி உம்கரத்தி லென்றியேசு 
செப்பினார் மேன்மை சிறந்து!

அழைப்பு

மாசு கறைபடிந்த மண்ணுலக வாழ்வினின்று 
வீசு புகழ்மணக்கும் விண்வாழ்வை - நேசர்தம் 
பாச மதனால் அருள்வாரே மீட்பிற்கி 
யேசு கதிவே றிலை

முடிப்பு

சிலுவை மரத்தினின்று சிந்தியவிம் மொழிகள் 
நிலுவை எதுவுமின்றி நீசர் - பளுவைத் 
தொலைத்த வகையுரைக்கும், ஏற்போர் எவர்க்கும் 
நிலைத்தபெரு வாழ்வும் தரும்! .

- பொன் வ க

வெளியீடு: சிறகடிப்பு இரு மாத இதழ் மார்ச்-ஏப்ரல்
சிலுவைமொழி வெண்பா - பொன் வ கலைதாசன்

கருத்துகள்