ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் - ஏசாயா 4:4 | நித்திய இரட்சிப்பு, நித்திய பாதுகாப்பு
ஏசாயா 4:4 "சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்."
அ. சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து:
சீயோனில் மீதியாயிருப்பவர்கள் எருசலேமில் தரித்திருக்கிறார்கள். மீதியான இஸ்ரவேலர் என்பவர்கள் சுவிசேஷ திருச்சபைக்கு உட்பட்டவர்கள் (எபி 12:22). அவர்கள் கிறிஸ்துவின் நகரத்தில் தங்கள் அடைக்கலத்தை தேடுகிறார்கள். கிறிஸ்துவே அவர்களுக்கு புகழிடமாய் இருப்பார் (சங் 23:1).
ஆ. ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்:
கர்த்தருடைய ஜீவ புஸ்தகம் நிரந்தர மையினால் எழுதப்படுகிறது. அதில் பரலோகப் பிதா தனிப்பட்டரீதியில் தாம் இரட்சிப்புக்கு என்று தெரிந்துகொள்ளுகிறவர்களின் பெயர்களை எழுதுகிறார். அவர் எழுதினது எழுதினதே. ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் மனந்திரும்புதலோடு கிறிஸ்துவண்டை வருவான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் கிறிஸ்துவின் பரிகார பலியை விசுவாசிப்பான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் பாவத்தோடு யுத்தம் செய்கிறவனாய் இருப்பான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் தெய்வபக்தியான மனுஷனாய் வாழுவான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் தேவனுடைய மகிமைக்காக வாழுவான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் இரட்சிக்கப்படுவான். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவன் எவனும் இரட்சிக்கப்படும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் (யோவான் 10:11,15; வெளி 5:9-10). அவருடைய மரணத்தின் நோக்கம் 100% நிறைவேரும். ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்ட ஒவ்வொருவனும் நீதிமானாகும்படி பாவம் அறியாத கிறிஸ்து இயேசு பாவமாக்கப்பட்டார் (2 கொரி 5:21). ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்ட அவ்வொவ்வொருவனுக்காகவும் அவர் மரணத்தை ருசிபார்த்தார் (எபி 2:9). ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்ட ஒருவனும் கெட்டுப்போவதில்லை (யோவான் 3:16). ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்ட எவனையும் தேவன் நீதிமானாக்குகிறார். ஆக, ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான் (ரோமர் 8:29-30).
இரட்சிப்பை இழக்க முடியும் என்று சொல்லும் ஒவ்வொருவனும் கிறிஸ்துவின் பரிகார பலியை நிராகரிக்கிறான். மாத்திரம் அல்ல, அவன் மனுஷனை பிரியப்படுத்தும்படி கடவுளுடைய வார்த்தையை பொய் என்று சொல்லுகிறான். ஏசாயா 4:4 வசனம் மிகத் தெளிவாக இரட்சிப்பின் நிச்சயத்தை எடுத்தியம்புகிறது. தேவன் எவனுக்கு இலவசமான பரிசாக இரட்சிப்பைக் கொடுக்கிறாரோ, அதை ஒருபோதும் அவர் திரும்பப் பெறமாட்டார், எபே 2:8. தேவன் அருளும் இரட்சிப்பு நித்தியமானது, எபி 5:9.
(- Andrew Kingsly Raj, 29/08/2024)
கருத்துகள்
கருத்துரையிடுக