வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கான ஆலோசனைகள் - ஊழியர். ஜான் போனர் (ஸ்காட்டிஷ் பிரஸ்பிடிரியன்)

    நீங்கள் நன்றாகத் துவங்கியுள்ளீர்கள்; நீங்கள் தொடர்ந்து முன்னேறுவதே என் விருப்பம். சந்தேகமே இல்லை, நீங்கள் உங்கள் சொந்த வீழ்ச்சியுற்ற தன்மையின் காரணமாகவும் உலகத்தினாலும் சாத்தானின் சோதனைகளை சந்திப்பீர்கள். ஆனாலும் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். பின்மாற்றத்தால் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களுக்குள்ளே வேர்கொண்டிராதவர்கள், "கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்" (மாற்கு 4:17). ஆண்டவர் மாத்திரமே உன்னுடைய இருதயத்தை கிருபையாக நிலைநிறுத்தி உறுதியாக நிற்கும்படியான பெலனை அளிக்கிறார். தேவனுடைய ஆசீர்வாதத்தால் உங்களுக்கு உதவியாக ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்: உங்களுடைய பொல்லாத இருதயத்தின் அறிந்துகொள்ளும்படியாக வேதத்தை வாசியுங்கள். இது ஒரு கிறிஸ்தவனுக்கும் மாயக்காரனுக்குமிடையே உள்ள பெருத்த வித்தியாசமாக இருக்கிறது: மாயக்காரன் தன்னுடைய சொந்த பாவங்களை அறிந்துகொள்ள (அ) ஒத்துக்கொள்ள விருப்பமற்றவனாக இருக்கிறான். தேவனிடம்  கூக்குரலிடுங்கள்: "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்!" (சங்கீதம் 139:23).

    உங்களுடைய கடந்த காலங்களை அவ்வபோது பார்வையிடுங்கள். எத்தனை பாவங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இந்த பாவங்களை வெருக்கும்படியாகவும், அவைகளைவிட்டு திரும்பும்படியாகவும் தேவ கிருபைக்காக ஜெபம் பண்ணுங்கள். பரம பிதாவிடம் அனுடினமும் இரக்கத்திற்காகவும் மன்னிப்புக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி கேட்டும், அவருடைய பூரண நீதி சுவிசேஷத்தின்மூலம் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தும் இருக்கிறீர்கள். உங்கள் முழுமையான இரே இரட்சகராகிய கிறிஸ்துவின்மீது உங்கள் கண்களை பதிய வையுங்கள் (எபி 12:2).

    உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு நாளில் உங்களுக்கு கொடுக்கப்போகும் மேன்மை என்னவென்பதை சிந்தித்தவர்களாக வாழுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் பிரதிபளிக்க வேண்டும். அமைதியும் சமாதானமுமான காலத்தை மட்டும் நம்புவது மிக எளிது. கிறிஸ்துவை பின்பற்றுவதால் உங்களுக்கு என்ன நேருவதாக இருந்தாலும் அவைகளை சகித்துக்கொள்ள ஆண்டவருடைய கிருபையை தேடுங்கள். 

    பரிசுத்த வேதாகமத்தை அனுதினமும் வாசித்து புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யுங்கள். வேதத்திலிருந்துதான் நீங்கள் ஞானத்தையும், அறிவையும், உந்துதலையும் பெற முடியும். விசுவசத்தில் ஆரோக்கியமாக இருக்கும்படியாக வேதத்தை வாசியுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். சீர்திருத்த அறிக்கைகளை வாசியுங்கள். ஆரோக்கியமற்ற உபதேசங்களை பரப்புகிறவர்களின் தோழமைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் சொன்ன அருமையான ஆலோசனை: "சிறந்த ஊழியர்களின் போதனைகளைக் கேளுங்கள், சிறந்த புத்தகங்களை வாசியுங்கள், சிறந்த தோழமையோடு தரித்திருங்கள்."

    தவறாமல் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருங்கள். அவர் நம்பிக்கையுள்ள உற்ற நன்பனாகவும், ஏற்ற சமயத்தில் உதவி செய்ய ஆயத்தமுள்ளவராகவும் இருக்கிறார். "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு 5:7). எந்த சூழ்நிலையிலும் ஒரு சிறிய ஜெபத்தை தேவனுக்கு ஏறெடுக்க பழகிக்கொள்ளுங்கள்.

    இந்த உலகத்தின் கண்கள் உங்கள் மேல் இருப்பதை மறந்துவிடவேண்டாம். உங்களில் குற்றங்குறைகளை கண்டுபிடிக்க பல கண்கள் உங்களை சுற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய கண்கள் எந்த நேரமும் உங்கள் மேல் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களுடைய எல்லா கிரியைகளுக்கும் தேவனிடம் ஒருநாள் நிச்சயம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எனவே நீங்கள் எதைச்செய்தாலும் அவரை பிரியப்படுத்த முயற்ச்சி செய்யுங்கள்: "அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்" (2 கொரி 5:9).

    இந்த உலகில் நீங்கள் என்ன வேலை செய்கிறவர்களானாலும், உங்கள் எல்லா கடமைகளிலும் கடின உழைப்போடும் உண்மையோடும் இருங்கள். எல்லாத் தீமைகளுக்கு வேராக ஒருக்கிற சோம்பேரித்தனத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் தேவனை மகிமைப்படுத்த ஜெபத்தோடு பிரயாசப்படுங்கள் (1 கொரி 10:31).

(1740 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் பிரஸ்பிடிரியன் ஊழியரான ஜான் போனர் அவர்கள் எழுதிய கடிதத்தின் சுருக்கம். சூழ்நிலைக்கேற்ற சில திருத்தங்களுடன்.)

(மொழிபெயர்ப்பு: ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)


தொடர்புக்கு: Pastor. D. Stephenson, Evangelical Baptist Church, Pykara, Madurai.





கருத்துகள்