போதகர்(கள்) திருச்சபைக்கு அவசியமா? சத்தியவழி சீர்திருத்த செய்தி மலர்
"போதகர்(கள்) திருச்சபைக்கு அவசியமா?" என்கிற மிக முக்கியமான கேள்விக்கு இக்கட்டுரையில் நான் பதிலளிக்க உள்ளேன். தேவன் தமது திருச்சபைக்கு அளிக்கின்ற மிகச் சிறந்த ஈவு, உண்மையுள்ள போதகர்கள் ஆவர். அந்த ஈவின் ஆசீர்வாதத்தையும் பலன்களையும் வேத வாக்கியங்கள் மூலமாக நாம் கற்றுக் கொள்ளலாம். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கென்று ஒன்றிணைந்து உழைக்கின்ற உங்கள் அனைவரின் ஆத்துமாவிற்கு இப்போதும் இனி வரவிருக்கின்ற காலங்களிலும், இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எரேமியா 3 : 15 -ஐ வாசிக்கவும். இங்கே நமது தேவனாகிய கர்த்தர் தனது திருச்சபைக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கிறார் "உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்". இந்த வாக்குறுதியில், மூன்று காரியங்கள் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
1. தேவன் தமது திருச்சபைக்கு அளிக்கின்ற தமது இருதயத்திற்கு ஏற்ற வரங்களாக உண்மையுள்ள போதகர்கள் இருக்கிறார்கள்.
உண்மையில், உண்மையும் விசுவாசமும் உள்ள போதகரை உள்ளூர் திருச்சபைக்கு அளிப்பதைப் போன்ற ஆசீர்வாதம் வேறெதுவும் இந்த உலகில் ஒரு திருச்சபைக்குக் கிடைக்காது. அந்த போதகன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவருடைய சர்வ ஏகாதிபத்ய கிருபையினால் பிரசங்கிக்கிறவனாக இருக்கிறான் (ஏசாயா 52:7; ரோமர் 10:15)
"சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன!" - ஏசாயா 52:7.
"அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே" ரோமர் 10:15.
2. உண்மையுள்ளவர்களும், தேவன் அருளிய போதகர்களும், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களுமாயிருக்கிற மனுஷரே தேவனின் மந்தையை மேய்க்கிறவர்கள்.
அவர்கள் ஆடுகளை கொள்ளையிடமாட்டார்கள், ஆடுகளை அடிக்கமாட்டார்கள், ஆடுகளை சுய இலாபத்திற்காக பயன்படுத்த மாட்டார்கள் அல்லது ஆடுகளை தூஷிக்கமாட்டார்கள். மாறாக, அவர்கள் ஆடுகளை போஷிப்பார்கள்! தேவ ஜனங்களை போஷிப்பதே தங்களின் வாழ்நாள் பணியாகக் கருதி, அந்த பணியை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
3. தமது திருச்சபைக்கு போதகர்களாக இருக்கும்படி தேவன் தந்த மனுஷர் தேவனின் சபையை அறிவோடும் புத்தியோடும் மேய்க்கிறார்கள்.
தமது ஜனங்களை போஷிக்கும்படி தேவனால் அழைக்கப்பட்டவர்கள் தெய்வீக சத்தியத்தைப் பற்றி தேவனால் கொடுக்கப்பட்ட அறிவையும், இந்த உலகில் தமது ஜனங்களின் தேவைகளைப் பற்றி தேவனால் கொடுக்கப்பட்ட புத்தியையும் கொண்டிருந்து. அதற்கேற்றபடி அவர்களை மேய்க்கிறார்கள்.
இந்த இருண்ட காலங்களில், தேவ ஜனங்களின் ஆத்துமாக்களை வியாபார ஸ்தலமாகவும், கர்த்தருடைய வார்த்தையை வஞ்சகமாக கையாளுகிற உண்மையற்ற, சுயநல நோக்கத்தோடு சேவை செய்கிற போதகர்களின் கைகளில் தேவனின் திருச்சபையானது மிகுந்த உபத்திரவம் அடைகிறது. ஆனால், தேவன் தமது திருச்சபைக்கு உண்மையுள்ள போதகர்களை அருளுவதாக வாக்கு பண்ணினார், அப்படியே அவர் தமது வாக்கை நிறைவேற்றினார். தமது திருச்சபைக்குத் தலையாயிருக்கின்ற நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வானத்திற்கு ஏறெடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமது பரமேறுதலின் வரங்களில் ஒன்றாக அவர் தமது திருச்சபைக்கு, "பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,... சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்" (எபேசியர் 4:12-13). இந்த மனுஷர்கள் அவருடைய சபைகளுக்கு தூதர்களாய் இருக்கின்றனர் (வெளிப்படுத்தல் 1:16-20). அவர்கள் கிருபை மற்றும் சத்தியத்தைப் பாதுகாக்க வானத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியாளர்களாக இருக்கின்றனர்.
இந்த உலகில் திருச்சபை கொண்டிருக்க வேண்டிய முதன்மை காரியம் உண்மையுள்ள போதகர்கள் ஆகும்.
கர்த்தருடைய சுவிசேஷ பணிக்கென்று தேவனால் அழைக்கப்பட்ட, வரம்பெற்ற, அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள ஊழியர்கள் இல்லாமல் திருச்சபை செவ்வையாக செயல்பட முடியாது. நாம் கூடி தேவனை ஆராதிப்பதற்கு அருமையான கட்டிடங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் கொட்டகைகள் அல்லது காடுகளிலோ சந்திக்கலாம். ஆனால் உண்மையுள்ள போதகர்களும், சுவிசேஷத்திற்கென்று தங்களை அர்ப்பணித்து அதை பிரசங்கிக்கும்படி தேவ வரம்பெற்ற மனிதர்கள் இல்லாமல் இவ்வுலகில் தேவனுடைய திருச்சபை இயங்க முடியாது. ஒவ்வொரு உள்ளூர் திருச்சபையும் தனக்கென ஒரு போதகரைப் பெற்று, அவருடைய ஆவிக்குரிய மற்றும் சரீரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அதற்குத் தேவையான சகல காரியங்களையும் செய்து கொடுப்பதே அந்த சபையின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும்.
போதகரில்லாத திருச்சபை தலையில்லாத சரீரத்திற்குச் சமம்: அது செத்ததாகவும், பயனற்றதாகவும், அழிந்து போகிறதாகவும் இருக்கும்!
ஆடுகளுக்கு மேய்ப்பன் தேவை. மேய்ப்பன் இல்லாமல் அவைகளால் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது. கிறிஸ்துவின் திருச்சபைக்கு உண்மையுள்ள போதகர்களின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
அப்போஸ்தலர் 20 ஆம் அதிகாரத்தை திருப்பிக் கொள்ளவும். ஒரு சுவிசேஷ பிரசங்கியாளராக தான் சந்தித்த ஆபத்துகளை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்திருந்தார். மேலும், வருங்காலங்களில், சுவிசேஷத்தின் நிமித்தமாக கர்த்தருடைய திருச்சபை சந்திக்க இருக்கின்ற ஆபத்துகளைக் குறித்தும் அவர் அறிந்திருந்தார். ஆகையால், எபேசு திருச்சபையிலுள்ள மூப்பர்களை கடைசியாக சந்திக்கும்படி பவுல் அவர்களை அழைத்தபோது, அவர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார். அந்த நிகழ்வையும் எபேசு திருச்சபை மூப்பர்களுக்கு வழங்கப்பட்ட பவுலின் செய்தியையும் லூக்கா இந்த அதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். பவுலினுடைய செய்தியின் முதல் பகுதியில் (வசனம் 17-27) அவர்களுக்கு முன்பாக பவுல் எவ்வாறு கர்த்தருடைய ஊழியனாக நடந்துகொண்டார் என்பதை அவர்களிடம் சொன்னார், "வெகு மனத்தாழ்மையோடு நான் கர்த்தரைச் சேவித்தேன்" மற்றும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததாகக் கூறினார்.
வெளியரங்கமாகவும் தனிப்பட்ட வகையிலும், பவுல் எபேசியர்களுக்கு மூன்று வருடங்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். "தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல்" என்று பவுல் அறிக்கையிடுகிறார். அவர் சுவிசேஷத்தை எளிமையாகவும் உண்மையோடும் பிரசங்கித்ததற்கு அதை கேட்ட எபேசு மக்களையே அதற்கு சாடசியாக நிறுத்தி, "எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்" என்றார்.
பின்னர், வசனங்கள் 28-32-ல், தனக்குப் பின்பு, சுவிசேஷப் பணியை தொடர்ந்து நிறைவேற்றும்படி பவுல் மூப்பர்களுக்குக் கட்டளையிடுகிறார். இந்த வசனங்களில், உண்மையுள்ள போதகர்களின் அவசியத்தையும், அதற்கான நமது பொறுப்பையும் பற்றி அவர் நமக்கு தெளிவுபடக் காண்பிக்கிறார். "ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள் நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்று வருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே, இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்போதும், சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக் கொடுக்கிறேன்" அப்போஸ்தலர் 20:28-32
எபேசு திருச்சபை மூப்பர்களுக்கு வழங்கப்பட்ட பவுலின் செய்தியிலிருந்து, சுவிசேஷ ஊழியப்பணியைப்பற்றின மூன்று முக்கியமான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன்.
1) போதகரின் கடமைப் பொறுப்பு யாது?
ஒரு போதகரின் பணி என்பது பெரும்பாலும் ஒரு சமூக சேவகராக, ஊக்கமளிப்பவராக மற்றும் மனோதத்துவ ஆலோசகராக இருப்பது என்று அநேக மக்கள் கருதுகின்றனர். வியாதியஸ்தர்களை மருத்துவமனையில் சந்திப்பது, முதியவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது, பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவது, திருமணங்கள் மற்றும் அடக்க ஆராதனைகளை நடத்துவது, சமுதாயக் கடமைகளில் ஈடுபடுவது, ஜனங்களை திருச்சபையோடு இணைப்பது மற்றும் பிரச்சனைகளோடு இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்றவையே ஒரு போதகரின் பிரதான பணியாக அவர்கள் காண்கின்றனர். ஆனால், போதகப் பணியை விவரிப்பதில் கர்த்தருடைய வாரத்தை இந்த விஷயங்களையெல்லாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை.
சுவிசேஷப் பணியைச் செய்யவும். தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் இரட்சிப்பை நாடவும் உள்ளூர் திருச்சபைகளை ஸ்தாபிக்க உதவுவதுமே ஒவ்வொரு போதகனுடைய தலையாயக் கடமை (1தீமோத்தேயு 4:5)
"நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு; தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று"-2 தீமோத்தேயு 4:5.
ஒரு போதகனுடைய ஊழிய ஸ்தலம் கர்த்தருடைய இறையாண்மையினால் மட்டுமே வரையறுக்கப்படுகிறது.
ஊழியப் பணிக்காக வரம் பெற்ற ஒவ்வொரு மனிதனும், தனது தலைமுறையில் உள்ள சகல ஜனங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியப் பொறுப்பு உள்ளது. கர்த்தர் அவனை அனுமதிக்கும் வரை, கிறிஸ்துவின் மகிமைக்காக தனது வரத்தை பெரிய அளவில் பயன்படுத்தக்கடவன். சுவிசேஷத்தின் முன்னேற்றத்திற்காக திறக்கப்பட்ட ஒவ்வொரு வாசலுக்குள் நுழைந்து, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கைப்பற்ற வேண்டும்.
சுவிசேஷப்பணிக்கென்று போதகர் மேற்கொள்கின்ற எந்த முயற்சியையும் செயலையும் தடை செய்வதற்கு உள்ளூர் திருச்சபைக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. மேலும், உண்மையுள்ள ஊழியன் எவனும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலிருந்து தன்னைத் தடை செய்ய முயலுகின்ற எந்த காரியத்தையும் அனுமதிக்கமாட்டான். இருப்பினும், போதகருடைய ஊழியத்தின் பிரதான ஸ்தலமாக உள்ளூர் திருச்சபையே இருக்கிறது, அதற்குத் தலையாக இருப்பதற்கே தேவன் அவரை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஒவ்வொரு போதகரும், தனது சபைக்குச் செய்யவேண்டிய ஊழியத்தின் பொறுப்புகளை உதாசீனப்படுத்தாதிருக்க வேண்டும். தொலைந்து போனவர்களையும் அல்லது கர்த்தருடைய சபையின் தேவைகளையும் நாம் உதாசீனப்படுத்தாதிருக்க வேண்டும். ஆயினும், அவருடைய பராமரிப்பின் கீழ் தேவனால் ஒப்புவிக்கப்பட்ட திருச்சபையின் விசுவாசிகளை போஷிப்பதே ஒவ்வொரு உண்மையுள்ள போதகரின் பிரதானப் பணியாக இருக்கிறது.
அப்போஸ்தலர் 20:28-ல் போதகருடைய கடமைப்பொறுப்பாக இருக்கின்ற ஐந்து காரியங்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
1) போதகர் தன்னைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எக்காலத்திலுமிருக்கிற எல்லா போதகர்களுக்கான பவுலினுடைய வார்த்தைகள் இதுவே, "உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்". இதன் அர்த்தம் என்னவெனில்: "போதகனே, உன்னுடைய சொந்த ஆத்துமாவை உதாசீனப்படுத்தாதபடி எச்சரிக்கையாயிரு. தேவனோடு உள்ள உன்னுடைய உறவைக் குறித்தும் கர்த்தருடைய ஊழியக்காரனாக உனது பொறுப்புகளைக் குறித்தும் ஜாக்கிரதை உள்ளவனாயிரு" (1தீமோத்தேயு 4:16).
உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு,
இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய்"-1தீமோத்தேயு 4:16.
எதுவும் உன்னை வழிவிலகச் செய்யாமலும், உன்னுடைய வேதாகமப் படிப்புகளையும்,உன்னுடைய சுவிசேஷ பிரசங்கத்தையும் ஜெபத்தையும் தடைசெய்யாமலும், எதுவும் உன்னுடைய இருதயத்தைக் கிறிஸ்துவிடம் இருந்து திசை திருப்பாமலும் இருக்கக்கடவது.
மற்றவர்களின் ஆத்துமாக்களுக்கு ஊழியஞ்செய்ய பிரயாசப்படுகையில், தனது சொந்த ஆத்துமாவைக் குறித்து கவலையற்று இருப்பதே இந்த உலகில் கர்த்தருடைய ஊழியன் சந்திக்கின்ற மிக மோசமான ஆபத்தாகும். ஆகவே, பவுல் சொல்லுகிறார், "உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்"
- முதலாவது, போதகன் தன்னுடைய நேரத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜெபத்திலும், படிப்பிலும், பிரசங்கத்திலும் தனது நேரத்தை ஞானமாய் செலவழித்து, அதை வீணடிக்காதிருக்க வேண்டும்.
- அவன் தனது சொந்த இருதயம், தனது சொந்த ஆத்துமா மற்றும் தனது சொந்த வாழ்வைக்குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அவன் தன் இருதயத்தின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் மீது எப்போதும் கவனமாயிருக்க வேண்டும். தனது ஆத்துமா அதீத உணர்ச்சிகளினால் ஆளப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், தான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தின்படி தனது வாழ்வு இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
- அவன் தொடர்ச்சியாகத் தனது கொள்கையை ஜாக்கிரதையுடன் பாதுகாக்க வேண்டும். அவனுடைய கொள்கை கிறிஸ்துவின் தூய்மையானக் கொள்கையாகவும், சுவிசேஷத்தின் கொள்கையாகவும், பாவிகளின் பதிலாளாக இருக்கின்ற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தமும், இலவசமும், சர்வஏகாதிபத்யமும், நித்தியமும், கிருபையுமுள்ள கொள்கையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவைகளுக்கென்று தனது முழுமையான கவனத்தை ஒவ்வொரு போதகனும் தொடர்ச்சியாகவும் கரிசனையோடும் கொடுக்க வேண்டும்.
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக் குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு; இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்" 1 தீமோத்தேயு 4:12-16.
இக்காரியங்களில் அசதியாய் இருக்கிறவன், போதக உத்தியோகத்திற்குத் தகுதியானவன் இல்லை.
2. போதகன் ஒரு மேய்ப்பன். அவன் தேவனுடைய மந்தை முழுவதையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
போதகன் தன்னைக்குறித்தும், "மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." கிறிஸ்துவின் சபை ஆட்டு மந்தையோடு ஒப்பிடப்படுகிறது. சுவிசேஷ பிரசங்கியாளர்களாகிய உண்மையுள்ள மேய்ப்பர்களினால் அவை கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். "போதகர்" எனும் சொல்லிற்கு "மேய்ப்பர்" என்றே அர்த்தம். கிறிஸ்து இயேசுவே பிரதான மேய்ப்பர், மந்தை முழுவதும் அவருக்கே உரியது. போதகர்கள் அனைவரும் அவருக்குக் கீழாக நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். மந்தையை மேய்ப்பதே அவர்களுடைய பிரதானக் கடமைப் பொறுப்பு.
"உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறது என்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்"-1பேதுரு 5:1-4.
இவ்வுலகில் காத்தருடைய ஜனங்கள் தங்கள் போதகர்களைப் போல இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (யோவான் 21:15-17). அவர்கள் நிலையற்றவர்களும், பாவிகளும், உதவியற்றவர்களும், பாதுகாப்பற்றவர்களும், தடுமாறுகிறவர்களும், வீழ்ந்துபோகின்ற ஆடுகளுமாய் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆடுகள், அவர்களை அன்போடு கண்காணிக்கின்ற மேய்ப்பர்களும், போதகர்களும் அவர்களுக்கு தேவை என்பதை மறவாதிருப்பீர்களாக!
பிரதான மேய்ப்பரால் அவருடைய பராமரிப்பிற்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட மந்தை முழுவதையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு போதகருடையது. அவர் "மந்தை முழுவதையும்" கண்காணித்து பாதுகாக்க வேண்டும். பலமுள்ள பலவீனமான ஆடுகள், முதிர்ச்சியுற்ற முதிர்ச்சியில்லாத ஆடுகள், அறிவுள்ள அறிவற்ற ஆடுகள், வயது முதிர்ந்த இளவயதுள்ள ஆடுகள், வீழ்ந்துபோன மற்றும் நிலைத்திருக்கிற ஆடுகள் என அனைத்து ஆடுகளையும் அவர் அன்போடும் கரிசனையோடும் கண்காணித்து பாதுகாக்க வேண்டும்.
போதகர் மந்தை முழுவதையும் எல்லா காலத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் கண்காணிக்க வேண்டும். ஆடுகளை புத்தியோடும் ஞானத்தோடும் போஷிக்கவும், தனது வாழ்வின் வாயிலாக ஆடுகளை பாதுகாக்கவும், ஆடுகளுக்கு முன்னால் சென்று அவைகளை வழிநடத்தவும், சுவிசேஷத்தினால் ஆடுகளை உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தவும், பிரச்சனைகளில் ஆடுகளுக்கு உதவவும் சிலவேளைகளில் பலமும் அன்பும் வாய்ந்த கரங்களினால் ஆடுகளை மென்மையாகத் தூக்கிச் செல்வதும் போதகருடையக் கடமையாக இருக்கிறது; இருப்பினும், ஆடுகளை சிட்சிப்பது ஒருபோதும் அவருடைய பொறுப்பு அல்ல. அப்படிச் செய்வதற்கு பிரதான மேய்ப்பருக்கு மட்டுமே ஞானமும் திறமையும் உரிமையும் உண்டு!
3. தேவனுடைய திருச்சபை மீது கண்காணியாக இருப்பது ஒவ்வொரு போதகருடைய கடமையாக இருக்கிறது.
"ஆகையால், உங்களைக் குறித்தும், பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்." பவுல் இங்கே பயன்படுத்துகிற மொழியைக் கவனமாக சிந்தியுங்கள். போதகரும், ஆடுகளில் ஒன்றாக இருக்கிறார். தேவனுடைய சுதந்தரத்தின் மீது ஆளுகைசெய்து, தனது ''சித்தத்தை திருச்சபையின் மீது தினிக்கின்ற ஒரு சர்வாதிகாரியைப்போல் அவர் இருக்கக்கூடாது. திருச்சபை கிறிஸ்துவுக்குச் சொந்தமானது, அது போதகருக்குரியது அல்ல. சுவிசேஷ ஊழியத்தைச் செய்யும்படி தேவனால் அழைக்கப்பட்ட ஒவ்வொரு மனுஷனும், அவன் ஊழியஞ்செய்கின்ற தேவனுடைய சபையைக் கண்காணிக்கும்படி தேவனுக்குக் கீழே பொறுப்பாளியாக இருக்கிறான்.
"உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்தி சொல்லுகிறதென்னவெனில்: உங்களிடத்தில் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்"-1 பேதுரு 5:1-3.
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகின்ற பொறுப்பு ஒரு கணவனுக்கு இருப்பதைப் போல தேவனுடைய திருச்சபையை ஆளுகின்ற பொறுப்பு போதகருக்கு உரியது. "தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாய் இருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?" -1 தீமோத்தேயு 3:4,5.
போதகன் அச்சுறுத்தலினால் அல்லாமல், தனது சொந்த மாதிரியினால் ஆள வேண்டும், சட்டதிட்டங்களினால் அல்லாமல் அன்பினால் வழிநடத்தவேண்டும்; தன்னுடைய சொந்த வார்த்தையை அல்ல, கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க வேண்டும்; தன்னுடைய சுய சித்தத்தின்படி செயல்படாமல் கர்த்தருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். அவன் ஆண்கள் மற்றும் பெண்களின் மதிப்பை ஆதாயப் படுத்திக்கொண்டவனாய், அவனால் ஆளப்படுவதற்கு அவர்கள் மனவிருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், ஆனால், அவன் தான் ஆள வேண்டும் ! அவனுடைய விசுவாசமும் உண்மைத்தன்மையும் பின்பற்றப்படவேண்டும், அவனுடைய ஆளுகைக்கு அவர்கள் கீழ்ப்படியவேண்டும்.
''தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்" - எபிரெயர் 13:7.
"உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடி யால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கமாட்டாதே"- எபிரெயர் 13:17.
யாராவது ஒருவர் பொறுப்பாக இருக்க வேண்டும், தனது சபையை பொறுப்பேற்று நடத்தும்படி தேவனால் நியமிக்கப்பட்ட நபரே அவருடைய திருச்சபையின் மீது போதகராக இருக்கும்படி தேவன் நியமித்தவர். தேவ செய்தியாளர்களுக்குத் தங்களை அர்ப்பணித்து அவர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை தேவன் அதமாக்குவார் (எண்ணாகமம் 16:1-35).
4. தேவனுடைய சபையை போஷிப்பதே போதகரின் பிரதானக் கடமை.
எபேசுத் திருச்சபை மூப்பர்களுக்கும் இக்காலத்திலுள்ள ஒவ்வொரு போதகருக்குமான பவுலினுடைய செய்தி இதுவே:- "ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு எச்சரிக்கையாயிருங்கள்". சபையை புத்தியோடும் ஞானத்தோடும் போஷிப்பதும், தூய சுவிசேஷக் கொள்கையின் ஞானத்தினாலும் அதைக் கேட்பவர்களின் விசேஷித்த தேவைகளைப் பற்றிய சரியான புரிதலினாலும் சபையை வழிநடத்த வேண்டியப் பொறுப்பு போதகருடையது.
அத்தகைய ஞானத்தையும் புத்தியையும் பரிசுத்த ஆவியாகிய தேவனின் வரத்தினால் மட்டுமே பெறமுடியும்; எனினும், அந்த வரங்களை ஜாக்கிரதையுடன் கூடிய வேத ஆராய்ச்சியினாலும் ஜெபத்தினாலும் மட்டுமே பெறமுடியும்.
→ சபை போதகரின் தேவைகள் எல்லாம் முழுமையாகச் சந்திக்கப்படுகிறதா என்பதை கவனித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு திருச்சபையினுடையது. அவருடைய தேவைகள் சந்திக்கப்படும்போதுதான், இந்த பூலோகக் காரியங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தின் தேவைகள் குறித்துக் கவலைப்படாமல், தனது நேரத்தை வேத ஆராய்ச்சிக்கும் ஜெபத்திற்குமாகச் செலவிட முடியும்.
→ தனது வாழ்வை வேதஆராய்ச்சியிலும், ஜெபத்திலும், பிரசங்கம் பண்ணுவதிலும் செலவழிப்பதே போதகருடையக் கடமையாக இருக்கிறது. அப்படிச் செய்யும்போது, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு ஊழியஞ்செய்வதற்குத் தேவையான புத்தியையும் ஞானத்தையும் அவன் தேவனிடமிருந்துப் பெற்றுக்கொள்வான். பரிசுத்த வேதாகமத்தை ஆராய்வதற்கும் ஜெபிப்பதற்கும் ஜாக்கிரதையோடு அவன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தாதிருந்தால், அவன் போதகனாய் இருக்கத் தகுதியற்றவன், ஏனெனில், ஆடுகளுக்குத் தேவையான உணவு அவனிடத்தில் இல்லை. போதகராக இருப்பதை எவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுகிறானோ அவ்வளவு நல்லது.
கற்பனையான தேவசெய்தி நம் மூளையை குஷிப்படுத்தி, கண்ணீர் வரவழைக்கும் கதைகள் நம் உணர்ச்சிகளைத் தூண்டலாம்; ஆனால், தெளிவான சுவிசேஷ சத்தியம் மட்டுமே நமது சிந்தையை உணர்த்தி, மனச்சாட்சியைக் கடிந்துகொண்டு, சித்தத்தை அடக்கி, இருதயத்தை ஆதாயம்பண்ணும்.
→ தேவனுடைய சபை அறியாமையில் இருக்குமானால், அது பலவீனமானதாக இருக்கும். அதற்கு வேதம் போதிக்கப்படவில்லையானால், அதனால் பிரயோஜனமான எதையும் நிறைவேற்ற முடியாது.
→ தேவனால் அழைக்கப்பட்ட எல்லா பிரசங்கியாளர்களும் கொள்கைவாத பிரசங்கியாளர்களே. அவர்கள் தேவனுடைய பரிசுத்தவான்களுக்கு தெய்வீக சத்தியத்தைப் போதிக்கிறார்கள். கொள்கை இல்லாத பிரசங்கியாளர் தோட்டா நிரப்பப்படாதத் துப்பாக்கியைப் போல வெறுமையாகவும், காற்றினால் நிரப்பப்பட்டதாகவும் பயனற்றதாகவும் இருப்பார்!
சுவிசேஷ பிரசங்கியாளர்கள் கொள்கைவாத பிரசங்கியாளர்களாக இருக்கின்றார்கள். மேலும் நாம் பிரசங்கிக்கிற சத்தியம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் [(அ) சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்)] பற்றியதாக இருக்க வேண்டும்.
→ சிலுவையின் கொள்கையே வேதத்தின் கொள்கை. மீட்பில் தேவனுடைய மகிமையின் வெளிப்பாடாகவும், உதவியற்றப் பாவிகளுக்கு நம்பிக்கையாகவும், சகலவித கீழ்ப்படிதலுக்கும் காரணமாகவும், எல்லாச் சோதனைக்கும் எதிரான பலமாகவும், ஒவ்வொரு உபத்திரவத்திலும் ஆறுதலாகவும், நாம் வாழ்வதற்கான நியதியாகவும், தேவராஜ்யத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கான வாசலாகவும் சிலுவையின் உபதேசம் இருக்கிறது.
→ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து குழந்தைகளுக்கு பாலாகவும், வாலிபருக்கு உணவாகவும், வயோதிபருக்கு தைலமாகவும், குளிருக்கு நெருப்பாகவும், காயம்பட்டவருக்கு மருந்தாகவும், போர்வீரனுக்கு கவசமாகவும், பலவீனனுக்கு பலமாகவும், சோதிக்கப்படுகிறவனுக்கு உற்றத்துணையாகவும், வீழ்ந்துபோனவனுக்கு நம்பிக்கையாகவும், மற்றும் மீட்கப்பட்ட யாவருக்கும் மனமகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
5. சுவிசேஷ ஊழியத்தின் பணியானது அதிக பொறுப்புகள் நிறைந்த உன்னத சுமையாக இருக்கிறது. ஏனெனில், ஒரு போதகன் ஊழியஞ் செய்கின்ற சபையானது "தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சபை"ஆகும்.
→ விலையேறப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமது மீட்பிற்கான விலைக்கிரயம் செலுத்தப்பட்டது. "உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்து இருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசி காலங்களில் வெளிப்பட்டார்" 1 பேதுரு 1:18-20
→ தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அவருடைய திருச்சபையில் அங்கமாக இருக்கிற ஜனங்களும், மற்ற எல்லா மனுஷரைப்போல வீழ்ச்சியுற்றவர்களும், குற்றமுள்ளவர்களும், சுபாவப்படி மரணாக்கினைக்குக் கீழாகப் பிறந்தவர்களுமாக இருந்தனர் (எபேசியர் 2:4). அவர்கள் நித்திய அழிவிற்கு உரியவர்கள். அவர்களிடத்திலிருந்து சாபத்தை நீக்கி, தெய்வீக நியாயாதிபதியின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே கூடும். மேலும் கிறிஸ்து, தமது சொந்த இரத்தத்தினாலே தம்முடைய ஜனங்களுக்கான மீட்பை வல்லமையாக நிறைவேற்றினார் (கலாத்தியர் 3: 13; எபிரெயர் 9:12)
பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் மற்றும் ஆவியான தேவனுக்கு இடையே கல்வாரியில் நடந்த பரஸ்பர நடவடிக்கை சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்டது.
→ தேவ நீதியை நிலைநாட்டும்படி, நமக்கான விலைக்கிரயத்தை இயேசு கிறிஸ்து தாமேமனப்பூர்வமாய்ச் செலுத்தினார். "கிறிஸ்துவும் நம்மைதேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்"- 1 பேதுரு 3:18.
கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ, அதாவது தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாகிய அவருடைய திருச்சபை மீது உரிமைக் கோர நீதிக்கு உரிமை இல்லை. ஏனெனில், அது கிறிஸ்துவின் இரத்தத்தினாலே திருபதி செய்யப்பட்டுவிட்டது (ரோமர் 8:1). நமது மீட்பிற்கான விலை செலுத்தப்பட்டதினால், குமாரனாகிய தேவன் தாம் சம்பாதித்த திருச்சபையை தமக்குரியதாக்கினார்.
தேவனின் இறையாண்மையுள்ள கிருபையின் குணாதிசயத்தைக் கவனியுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது திருச்சபைக்கு செய்ததைப்போல வேறு ஒருவருக்கும் செய்ததில்லை.
→ "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்" எபேசியர் 5 : 25-27
கிறிஸ்து தமது திருச்சபையை நித்திய அன்பினாலே நேசித்தார். உலகம் உண்டாவதற்கு முன்பே பிதாவாகிய தேவன் அதைத் தெரிந்தெடுத்து குமாரனிடத்தில் கொடுத்தார்.
⁕ அற்புதமானதும் முடிவானதுமான இரத்தம் சிந்துதலினால் உண்டான மீட்பினால் கிறிஸ்து தமது சபையை சம்பாதித்தார்.
⁕ மறுபிறப்பில் பரிசுத்த ஆவியானவரின் கிருபையினாலும் வல்லமையினாலும் ஆண்டவராகிய இயேசு தமது சபையை சுத்திகரிக்கிறார்.
⁕ அவர் தமது கிருபையினாலே தமது திருச்சபையை போஷித்து, பராமரித்து பாதுகாக்கிறார்.
⁕ கறைதிரை ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையில் அவர் தமது சபையை நிறுத்துவார்.
⁕ திரித்துவ தேவனுக்கு மிகவும் விலையேறப் பெற்றதாயிருக்கிற தேவனின் சபையை உண்மையும் விசுவாசமுமுள்ள போதகர்களின் வசம் ஒப்படைத்திருக்கிறார். நாம் ஒருபோதும் அதை தூஷியாமல், உள்ளார்ந்த அன்போடும் ஜாக்கிரதையுள்ள விசுவாசத்தோடும் அதற்கு ஊழியஞ் செய்வோமாக!
2. போதகர்கள் ஏன் அவசியம்?
தேவனுடைய சகல பரிசுத்தவான்களும் கிறிஸ்து இயேசு மூலமாய் தேவனுக்குள் ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருக்கிறார்கள். நமக்கு பூலோக ஆசாரியர்களோ, மத்தியஸ்தர்களோ அல்லது பரிந்து பேசுபவர்களோ தேவையில்லை. பரிசுத்த ஆவியாகிய தேவன் தாம் தெரிந்துகொண்ட யாவருக்கும் போதிக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் தேவனிடமிருந்து கிருபை பெற்று சத்தியத்தை அறிகிறான். அப்படியிருக்கையில், போதகர்களின் தேவை ஏன் திருச்சபைக்கு அவசியமாகிறது? இக்கேள்விக்கான மூன்று பதில்கள் கர்த்தருடைய வேதத்திலிருந்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அ) போதகர்கள் திருச்சபைக்கு அவசியம் தேவை, ஏனெனில், அவருடைய சபைக்கான தேவனின் நோக்கம் அதுவே.
"உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்" - எரேமியா 3:15
தேவன் தாம் தெரிந்துகொண்டவர்களின் இரட்சிப்பை சுவிசேஷப் பிரசங்கத்தின் வாயிலாக நியமித்தார் (1 கொரிந்தியர் 1:21 - 23; ரோமர் 10: 9-17; 1 பேதுரு 1:23-25; யாக்கோபு 1:18).
"எப்படியெனில், தேவ ஞானத்துக்கேற்றபடி உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்" 1 கொரிந்தியர் 1:21-23.
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமை எல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்: உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே"-1 பேதுரு1:23-25.
பரிசுத்த வேதாகமத்திற்கு உண்மையும் சத்தியமுமான விளக்கத்தை அளிக்கின்ற தேவ ஜனங்களின் வாயிலாக மட்டுமே தேவன் தமது ஜனங்களுடன் பேசுகிறார்.
("நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா? - ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?" -அப்போஸ்தலர் 8:31) கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக தேவன் தமது ஆவியானவரைக் கொண்டு தமது ஜனங்களின் இருதயத்தில் நேரடியாகப் பேசுகிறார். ஆனால், தனிப்பட்ட வேத ஆராய்ச்சியும் ஆராதனையும் தருகின்ற தனிப்பட்ட புரிதலானது கர்த்தருடைய வார்த்தையின் வெளியரங்கமான பொது ஊழியத்தின் விளைவாக இருக்கிறது. வார்த்தைப் பிரசங்கிக்கப்படாமல் மீட்பைப் பெற முடியாது. எனவே, ஆடுகள் மேய்ப்பனால் வழிநடத்தப்பட்டு போஷிக்கப்படவேண்டும். போதகர்கள் தேவை இல்லையெனில், தேவன் அவர்களைத் தமது இராஜ்ஜியத்தில் உபதேசியர்களாக நியமித்திருக்கமாட்டாரே. தேவன் தமது ஜனங்களுக்கு அவசியமில்லாதவற்றை அருளுவதில்லை. சுவிசேஷப் பிரசங்கம் மட்டுமே சபையை அலங்கரிக்கின்ற ஆபரணமாக இருப்பதில்லை. உங்கள் போதகரும் அவர் பிரசங்கிக்கின்ற சுவிசேஷமும் உங்கள் ஆத்துமாக்களுக்கும் உங்கள் சபைக்கும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி. சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனி குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக, அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது"- எபேசியர் 4:8-16.
நீங்கள் சுயமாகக் கற்றுக்கொள்கின்ற எந்தக் கொள்கையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள். "ஒருவன் தனக்குத் தானே வழக்கறிஞராக இருந்தால் அவன் வக்கீலுக்கு ஒரு முட்டாளைப்போல இருக்கிறான்" என்கிற பொதுவான பேச்சு மனுஷர் மத்தியில் காணப்படுகிறது. மேலும், ஒருவன் தனக்குதானே தீர்க்கதரிசியாக இருந்தால், அவன் தீர்க்கதரிசிக்கு ஒரு முட்டாளைப்போலவே இருக்கிறான் என்பதை நான் உறுதிப்படக் கூறுகிறேன். உண்மையுள்ள சுவிசேஷப் பிரசங்கியாளர்களைக் கொண்டு தேவன் தமது ஜனங்களுக்கு தமது வார்த்தை, தமது சித்தம் மற்றும் தமது சத்தியத்தைப் போதிக்கிறார்.
ஆ. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தி அடைவதற்காக தேவன் தமது சபைக்குப் போதகர்களைத் தந்துள்ளார்.
எபேசியர் 4:12-16-ஐ வாசிக்கவும். "பக்திவிருத்தி" என்ற சொல்லிற்கு "கட்டி எழுப்ப" என்று பொருள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சுவிசேஷ பிரசங்கத்தினால் மனமாற்றமடையும்போது அதே சுவிசேஷ பிரசங்கத்தினால், அவர்கள் விசுவாசத்தில் கட்டியெழுப்பப்படுகிறார்கள். சுவிசேஷ பிரசங்கத்தினாலே ஆண்களும், பெண்களும் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு தேவனுடைய சத்தியத்தைத் தங்கள் வாழ்வில் நடைமுறைபடுத்தி அதன்படி நடக்கிறார்கள்.
இ. ஆண்டவர் தமது சபைக்கு தமது இருதயத்திற்கு ஏற்ற போதகர்களைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் தமது ஜனங்களை மாறுபாடான மற்றும் கள்ளப் போதனைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவேண்டும்.
"நாம் இனி குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்" - எபேசியர் 4:14.
"நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திச் சொல்லிக் கொண்டு வந்ததை நினைத்து விழித்திருங்கள்" - அப்போஸ்தலர் 20:29-31. (2 தீமோத்தேயு 3:1-4:5-ஐ வாசிக்கவும்)
கொடிதான ஓநாய்கள் தங்கள் மாறுபாடான கோட்பாடுகளுடன் சபைக்குள் நுழைந்து, தந்திரமான போதனைகளினால் அதை அழிக்காதபடிக்கு, போதகர்கள் எப்போதும் விடாமுயற்சியுள்ள மேய்ப்பர்களைப் போல மந்தையைக் கண்காணிக்க வேண்டும். 2 தீமோத்தேயு-ல் பவுல் எவ்வாறு கள்ளப் போதகர்களை பெயரிட்டு அழைத்தாரோ, அதேப்போல, போதகரும் ஓநாய்களைப் பற்றி சபைக்கு வெளிப்படுத்த வேண்டும்.
மனுஷருடைய ஆத்துமாக்களுக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும், தேவனின் மகிமைக்கும் விசுவாசமுள்ளவராக போதகர் இருப்பாரேயாகில், கிறிஸ்துவுக்குள் இலவசமும் சர்வஏகாதிபத்ய கிருபையுமுள்ள தேவனின் சுவிசேஷத்திற்கு எதிராயிருக்கிற ஒவ்வொரு போதனையையும் அவர் வெளிப்படுத்த வேண்டும். அது முளைக்கும்போதே அதை வெட்டிவிட வேண்டும். அவர் தொடர்ந்து, பேரார்வத்துடனும், மனதுருக்கத்துடனும் தேவஜனங் களை எச்சரித்து, சுய-சித்தம், கொள்கைவாதம், தாராளமயம் மற்றும் கிரியை சார்ந்த மதத்திலுள்ள (கிறிஸ்தவத்திலுள்ள) ஒவ்வொரு மாறுபாட்டையும் சபைக்கு எடுத்துரைக்க வேண்டும். சுவிசேஷத்தின் மாறாத (உறுதியான) அஸ்திபாரத்தின் மீதும், கிறிஸ்துவின் பதிலாள் மரணம் மற்றும் பாவபரிகாரபலியின்மீதும், அவருக்குள் இருக்கின்ற தேவனின் கிருபையுள்ள ஈவின்மீதும் தேவனின் வீட்டைக் கட்டியெழுப்ப அவர் அயராது உழைக்கவேண்டும்.
3. கள்ளப்போதனையின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிராக திருச்சபை எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்?
இந்த உலகை சுற்றிவளைத்திருக்கும் சகலவிதமான கள்ளப் போதனைகளில் இருந்து தேவனின் சபையைப் பாதுகாப்பதற்கான ஒரே நிச்சய வழி கர்த்தருடைய வார்த்தையே ஆகும். எபேசு திருச்சபை சகோதரர்களுக்கான பவுலின் கடைசி வார்த்தை இதுவே:- "இப்போதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்" - அப்போஸ்தலர் 20:32
விசுவாசமுள்ள ஒவ்வொரு போதகனும் கலப்பில்லாத சுத்த சுவிசேஷ போதனையினால் தேவனின் திருச்சபையை போஷித்து, கிறிஸ்துவுக்குள் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்திலிருந்து அவர்களை வழிவிலகச் செய்கின்ற ஒவ்வொரு கொடிதான ஓநாயையும் வெளிப்படுத்த பெருமுயற்சி எடுக்கவும், கிறிஸ்துவுக் குள்ளான தேவனின் இலவசமும் சர்வ ஏகாதிபத்ய கிருபையுமுள்ள சுவிசேஷத்தைக் கேட்கிற அனைவருக்கும் அதை உண்மையாக விளக்கப்படுத்தவும் வேண்டும்.
ஆகையால், சகோதரரே, நாம் உண்மையும் விசுவாசமுமுள்ள போதகர்களாயிருந்தால், சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களுக்கு முன்பாக மீட்பின் அதிசயங்களையும் கிருபையின் மகிமையையும் நாம் தொடர்ந்து முன்னிறுத்த வேண்டும். எனினும், தேவன் தாமே அவருடைய திருச்சபையின் பாதுகாப்பாக இருக்கிறார் (மத்தேயு 16:18). தேவ பிள்ளைகளே, எப்போதும் கிறிஸ்துவை நம்பி அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கு விடாமுயற்சியுடன் செவிமடுக்கக்கடவீர்களாக! (2 தீமோத்தேயு 1:9-13).
"அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்த கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; இவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அநுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு" 2 தீமோத்தேயு 1:9-13.
T.U.L.I.P. -ஐ நினைவுக்கூறுங்கள்.
T - Total depravity of man - மனிதனின் முழுமையான வீழ்ச்சி
U - Unconditional Election - நிபந்தனையற்ற தெரிவு
L - Limited Atonement - குறிப்பிட்டோருக்கான பாவப்பரிகாரபலி
I - Irresistible Grace - நிராகரிக்கப்படமுடியாத கிருபை
P - Perseverance of Saints - பரிசுத்தவான்களின் விடாமுயற்சி
கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களை பலவான்களாக்கும்; கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்களை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும். விசுவாசமும் உண்மையுமுள்ள போதகர்களின் அவசியத்தை இந்த சிறிய கட்டுரை உங்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க உதவியிருக்கும் என்று நான் நம்புகிறேன். கடைசியாக, அப்போஸ்தலனாகிய பவுலின் இரண்டு பிரதானக் கூற்றுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன். அவைகளை நான் விளக்கப்படுத்தப் போவதில்லை. அவைகளை நீங்கள் வாசித்து, அதை தியானித்து, கடைப்பிடிப்பதற்கேற்றப் படிப்பினைகளை அருளும்படி தேவனிடம் கேளுங்கள்.
"அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்தி சொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக் கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்" - 1 தெசலோனிக்கேயர் 5:12-13.
"கடைசியாக சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்ப டும்படிக்கும், துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலும் இல்லையே" 2 தெசலோனிக்கேயர் 3:1
Bibliography: www.donfortner.com](http://www.donfortner.com/sermon-notes/44-acts/act20v28-32whydoweneedapastor1574.htm
(இவாஞ்செலிக்கல் பாப்திஸ்து திருச்சபை வெளியிடும் சத்திய வழி சீர்திருத்த செய்தி மலரில் இருந்து எடுக்கப்பட்டது)
தொடர்புக்கு: Evangelical Baptist Church
கருத்துகள்
கருத்துரையிடுக