தேவனுடைய வாக்குத்தத்தங்கள் - ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்

 டிசம்பர் 6

தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

தீர்க்கதரிசிகள் உறைத்த எல்லா வாக்குத்தத்தங்களும் பெத்லகேமிலே பிறந்த இயேசு கிறிஸ்துவின் தோழ்களில் தங்கியிருக்கிறது. இவரே அவை எல்லாவற்றின் நிறைவேறுதலாக இருக்கிறார்.

நம்முடைய நன்பர்களோ உறவினர்களோ அநேக நாள் சென்ற பின் நம்மிடத்தில் அவர்களுடைய வருகையை உறுதி செய்யாமல் திடீரென்று நம் வீட்டிற்கு வருவதை நாம் பொதுவாக விரும்புவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து அவர்களை இப்போது பார்ப்பதில் மகிழ்ச்சியடைவோம்தான். என்ற போதிலும் அவர்கள் தங்கள் வருகையை முன்னரே அறிவித்திருந்தால், அதற்கேற்றார்போல் நம் அலுவல்களை மாற்றி அமைத்து அவர்களுக்கான ஆயத்தங்களை செய்திருப்போம். இதுவே நாம் விரும்புவது. 

ஆனால், இயேசு கிறிஸ்து அவருடைய முதல் வருகையை (கிறிஸ்து பிறப்பை) திட்டமும் தெளிவுமாக அறிவித்திருந்தார். தீர்க்கதரிசிகள் உறைத்த எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள் வெறுமனே இயேசு கிறிஸ்துவின் புவிவருகையை மாத்திரம் அறிவியாமல், அவருடைய புவிவருகையின் நோக்கம் என்ன என்பதையும் திட்டமும் தெளிவுமாக எடுத்தியம்பியது.

இயேசு கிறிஸ்து பெத்லகேமிலே பிறப்பார் என்பதை தீர்க்கதரிசியாகிய மீகா அறிவிக்கிறார், "எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது." (மீகா 5:2)

தீர்க்கதரிசியாகிய ஏசாயா இன்னும் மிகக் குறிப்பிட்டு நம்முடைய கற்பனைக்கெட்டாத நாம் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தீர்க்கதரிசனத்தை உறைக்கிறார். அது இயேசு கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு. "ஆதலால், ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." (ஏசாயா 7:14)

ஆதியாகமம் 22ஆம் அதிகாரம் 18ஆம் வசனம் இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் வம்சாவளியில் வருவார் என்றும் தேவனுடைய ஒட்டுமொத்த உடன்படிக்கை வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலாக இருப்பார் என்றும் முன்னுரைக்கிறது: "உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும்" (பார்க்க எண் 24:17)


இயேசு கிறிஸ்து எகிப்திலிருந்து வரவழைக்கப்படுவார் என்ற தீர்க்கதரிசனத்தையும் பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறோம்: "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்" (ஓசியா 11:1; மத் 2:13). 

மாந்தர்கள் மிக அல்லல்பட்டு புழம்பி அழுதுகொண்டிருக்கும்  நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இருக்கும் என்று எரேமியா தீக்கதரிசனம் உரைக்கிறார்: "ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்கிறார்."(ஏரே 31:15; பார்க்க மத் 2:16-18)

இந்த தீர்க்கதரிசனங்கள் நமக்கு நினைப்பூட்டுவது என்னவென்றால், மாந்தரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு விடுவிக்க மா தேவன் மானிடர்மீது தடுத்து நிறுத்த முடியாத தீவிர வைராக்கியத்தோடு காட்டிய கிருபையின் வெளிப்பாடே இயேசு கிறிஸ்துவின் மானுட பிறப்பு. இது தான் கிறிஸ்துமஸ் வரலாறு. உடைந்து நொறுங்கி பயத்தாலும் திகிலாலும் சூழப்பட்டிருக்கிற இவ்வுலகத்தை தேவன் அப்படியே விட்டுவிடுகிறவரல்ல. நாம் பாவத்தில் தொழைந்துபோகவும், இருதயத்தின் கேட்டினால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கையற்றவர்களாக இருக்கவும் அவர் விடமாட்டார்.  கிறிஸ்துவின் பிறப்பு ஒரு தோழ்வியாக முடியப்போவதில்லை. தேவ நீதியின்படி கோபாக்கினையை மாத்திரமே பெற்று முடிவிலா தண்டனையை அடைய இருந்த நம்மை முழுமையாக விடுவிப்பதே அவர் நோக்கம். அதற்காகவே இழிமரணத்தை தெரிந்தெடுத்தார். மேற்கண்ட தீர்க்கதரிசனங்களின்படி மீட்பின் வரலாற்றை வகுத்த இறைவனின் பிறப்பின் முடிவு மனிதருக்கு ஆக்கினைத் தீர்ப்பை அல்ல; கிருபையை அழிக்கிறதாக இருக்கிறது. இந்த மீட்பின் வரலாற்றின் நடுநாயகனாக நித்திய தேவன் அவருடைய ஒரே பேரான குமாரனையே தெரிந்தெடுத்தார். வேறெவராலும் இது சாத்தியமாகாது. தேவ குமாரனும் நம்முடைய கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து ஒருவரலேயே பாவமும் வேதனையும் நிறைந்த இவ்வுலகில் தேவ நீதி எதிர்பார்க்கிற பூரண நீதியுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, பிதாவின் கோபத்தை திருப்திசெய்கிற பரிகார பலியாக மரித்து, அவர் மேல் விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனை கொடுக்கும்படியான வல்லமையோடு மரணத்திலிருந்து உயிர்த்தெழ முடியும். 


இன்று நீ கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் இது தான். மேலே பார்த்த ஆதி தீர்க்கதரிசனங்களும் (பழைய ஏற்பாடு) அதன் நிறைவேருதலாக இருக்கிற இயேசு கிறிஸ்துவுமே உனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை. இத்தோடு அவருடைய வரலாறு முடிவடையவில்லை. இவ்வனைத்து தீர்க்கதரிசனங்களும் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நிறைவேறவும், அவர்கள் ஒவ்வொருவரும் பாவமும் துக்கமும் நிறைந்த வாழ்விலிருந்து முழுமையான விடுதலை அடையவும் இன்றும் தேவன் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மர்ம அறுவை சிகிச்சையின் மூலம் தெய்வீக விசுவாசத்தை உட்புகுத்துகிறார். 


நீ தனியாக இல்லை. நீ தனியாக பாவத்தோடும் துக்கத்தோடும் போராட வேண்டிய அவசியம் இல்லை. தீர்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்ட மேசியா உனக்காக உன்னோடிருந்து போர் புரிவார். பாவமும் துக்கமும் மாறிப்போகும்மட்டும் அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னை கைவிடுவதும் இல்லை. இந்த பூலோகத்தின் கால சகாப்தத்தில் நீ நடுமையத்தில் வாழலாம். ஆனால், ஒவ்வொரு கதைக்கும் ஒரு வெற்றிகரமான முடிவு இருப்பதுபோல தேவனுடைய மீட்பின் திட்டத்தின் வெற்றியை ஒருநாள் உன்னுடைய சொந்த கண்களால் காண்பாய். தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவினால் மீட்பை அடைந்த ஒரு திரள் கூட்டம் பரிசுத்த நித்திய மாறாத தேவனை தூதர் சேனை திரள் சூழ நின்று ஆராதிப்பதைப் பார்ப்பாய். அந்த கூட்டத்தில் உன்னையும் நிருத்த வல்லவராகிய கிறிஸ்து இயேசுவே உன் நம்பிக்கையாக கொண்டிருப்பாயாக. மீட்பின் வெற்றி உன்னுடைய சொந்த அறிவிலும், பெலத்திலும், நன்மையிலும் அல்ல; அவருடைய மீட்கும் வைராக்கியத்திலும், பூரண நீதியிலும், அளவற்ற கிருபையிலும் அடங்கி இருக்கிறது. 

வாசிக்க: மீகா 5:1-6

பெற்றோர்கள் பகுதி:

வாக்குத்தத்தம் என்றால் என்ன என்று உங்கள் பிள்ளைகளிடம் கேள்வி கேட்டுப்பாருங்கள்.  ஏன் நாம் வாக்குத்தத்தம் செய்கிறோம், அதை நிறைவேற்றுகிறோமா என்று கேட்டு அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுங்கள். கிறிஸ்து இயேசுவின் பிறப்பின்மூலம் எப்படி தேவன் தமது அனைத்து தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றுகிறார் என்பதை அவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.


(ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்)


கருத்துகள்