டிசம்பர் 1
முதல் கிறிஸ்து பிறப்பு பாடல் - ஆண்ட்ரூ கிங்ஸ்லி ராஜ்
உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து: "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக" என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:13-14
கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த நற்செய்தி இராத்திரியில் வயல்வெளியில் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்கு கர்த்தருடைய தூதனால் அறிவிக்கப்பட்டது. அந்த நற்செய்தியின் தொடர்ச்சியாக வானத்தின் தூதர் பூமிக்கு இறங்கி வந்து முதல் கிறிஸ்து பிறப்பு பாடலை பாடுகிறார்கள். தங்கள் இருதயங்களை தேவனுக்கு கொடுக்கிறவர்களை இரட்சிக்கும்படி நித்திய பிதா இரட்சிக்கும் கிருபையோடு தமது கரத்தை நீட்டியதைக் கண்டு ஆனந்தித்து தூதர்கள் பாடுகிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பு என்பது மனிதர்களின் சிந்தனைத்திரனுக்கு அப்பாற்பட்டதும், அற்புதமானதும், ஆச்சரியமானதும், புரிந்துகொள்ளமுடியாதுமான நிகழ்வு. நித்திய வார்த்தையாக இருக்கும் தேவன் மண்ணில் தாம் உண்டாக்கின மனிதனைப் போன்று ஒரு மனிதனாக பிறப்பது என்பது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நீங்கள் முழுமையாக அறிந்துகொள்வீர்களானால் உங்களால் கிறிஸ்துவின் பிறப்பைப் பாடாமல் இருக்க முடியாது. இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மரியாள் கற்பந்தரித்தபோதோ, தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தபோதோ, அல்லது கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தேவன் அறிவித்தபோதோ தூதர்கள் இந்தப் பாடலை பாடவில்லை. சரியாக, கிறிஸ்து இயேசு ஒரு பாலகனாக பிறந்தபொழுது பாடப்பட்டது. அப்படியானால், இந்த பிரமிக்கத்தக்க நிகழ்வைக் கண்டதன் வெளிப்பாடாக தூதர்கள் இந்த பாடலைப் பாடினார்கள் என்றே புரிந்துகொள்ள முடியும்.
தேவன் தமது சாயலின்படி மனிதனை உண்டாக்கி அவனைப் பாதுகாத்து வழிநடத்தி வந்தபோதும் அவன் தேவனுக்கு எதிராக பாவம் செய்தபடியால் தேவன் அழகுற படைத்த இவ்வுலகம் உடைந்து நொறுங்கிப்போய் திகைத்து நின்றது. இவ்வுலகம் உடைந்து நொறுங்கிக் கிடப்பதற்கான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கிறது. மனிதனுடைய இருதயம் கேடானதை சிந்தித்து நடப்பிக்கிறதிலிருந்து, உலக அரசியலில் யுத்தங்களும் சீர்கேடுகளும் நடந்துவருவதை நாம் பார்க்கிறோம். அழகற்றுப்போய் இருளில் அமிழ்ந்து கிடக்கிற இந்த உலகத்தை மீண்டும் அழகுற மாற்றவும் தம்முடைய தெய்வீக ஒளியால் ஒளிமயமாக்கவும் இயேசு பாலனாய் இந்த பூமியில் வந்து உதித்தார். அவர் எப்பேர்பட்ட பாவியையும் தமது அன்பினால் திருப்புகிறவராகவும், அவனுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுகிறவராகவும் காணப்பட்டார். பாவத்தின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிற மனிதனுக்கு தெய்வீக விடுதலையைக் கொடுக்கும் அதிகாரம் நிறைந்தவராக காணப்பட்டார். இப்படியாக மனிதனை மீட்க கடவுள் தமது பகிர்ந்து கொடுக்க முடியாத குணமான தற்சார்புடைமையைத் துறந்து மா தியாகம் செய்து ஒரு கண்ணியின் வயிற்றில் கற்பமாக அவளிடம் அரவணைப்பைப் பெற்று அவளின் மடியில் தவழ்ந்தார். அவர் நினைத்திருந்தால், பாவத்தை விரும்பி செய்து அதில் புரண்டுருண்டு கொண்டிருக்கிற மனிதனை அப்படியே விட்டிருக்கலாம். அவர் நினைத்திருந்தால், உடைந்துநொறுங்கி இருக்கிற உலகத்தை அப்படியே தேவ கோபம் சூழ விட்டிருக்கலாம். அவர் பாவ மனிதனைக் காப்பாற்ற கடன் பட்டவர் அல்ல. அவர் நம்மைக் காப்பாற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இருந்தபோதிலும் தேவன் தமது சர்வ ஏகாதிபத்திய கிருபையோடு உடைந்துநொறுங்கிப்போன, மீறுதல் நிறைந்த உலகத்தைக் கண்ணோக்கிப் பார்த்தார். பாவத்திற்கு எதிரான தேவ கோபத்திலிருந்து நம்மை மீட்டு காப்பாற்ற நித்திய பிதாவுக்கு சரிநிகரான இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார். அவர் ஒரு பெரிய ராஜ மாளிகையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, சர்வ வல்லமையுள்ள ஆண்டவரும், சிருஷ்டி கர்த்தரும், ஏக ராஜாவுமாக இருப்பவர் தமக்காக ஒரு ஏழைக் குடும்பத்தை தெரிந்தெடுத்தார். கொட்டகையில் மரியாளின் அரவனைப்புக்காக அழுத இயேசு சிலுவையில் தொங்கி வேதனையால் கதறினார். அவர் நம்மை இரட்சிக்க வந்தபடியினால் பாடுபடுகிறவராக வந்தார். மனிதர் ரூபமாக வெளிப்பட்ட அவர் இப்படியாக சிலுவை வரைக்கும் தம்மைத் தாழ்த்தினார். நியாயப்பிரமாணத்தால் தரமுடியாத இரட்சிப்பை சிலுவையில் சம்பாதித்து நமக்கு பரிசளித்தார். நாம் அடைந்திருக்கவேண்டிய தண்டனைகளை அவர் தம்பேரில் ஏற்று நம் பாவத்தை சிலுவையில் பரிகரித்தார். பாவத்தையும் மரணத்தையும் வென்றவராக உயிர்த்தெழுந்தார். மனிதர்களாகிய நாம் பாவத்தின் வல்லமையிலிருந்தும் மரணத்தின் வல்லமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டு தேவனிடத்தில் சமாதானம் பெற்று பரலோகில் அவரோடு நீடூழி வாழ வேண்டும் என்ற விருப்பமுடையவராக இருக்கிறார். இவைகள் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதும், எந்த கவிஞனாலும் கற்பனை செய்து பார்க்க முடியாததுமான விந்தை. தேவன் மனிதன் மீது காட்டுகிற பொறுமை, மன்னிக்கும் அன்பு ஆகியவற்றை எழுத வார்த்தைகள் போதாது. கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் இறைவனே மனிதர்களின் பரிசானார். கடைசியில் மனிதரின் இரட்சிப்பிற்கான நம்பிக்கை நட்சத்திரம் பூமியில் தோன்றியதால் தூதர்சேனைக் கூட்டம் மகிழ்ந்து பாடல் பாடினார்கள். நீங்களும் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சி கீதத்தை பாடவேண்டாமா?
வாசிக்க: லூக்கா 2:13-14, வெளி 5:8-11
பெற்றோர்கள் பகுதி: உங்கள் குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று கேளுங்கள். லூக்கா 2:13-14 வசனங்களை அவர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள். கிறிஸ்து பிறந்த பொழுது ஏன் தூதர்கள் பாடினார்கள் என்று கேள்வி கேட்டுப்பாருங்கள்.