செந்தமிழில் புகழ்வணக்கம்! - பொன் வ க

நீருண்ட மேகங்கள், 
     நீள்வானம், நிலவு,கதிர்,
சீராகச் சுழன்றுவரும் 
     விண்மீன்கள், நிலமீதில் 
வேர்கொண்ட தாவரங்கள்,
     விலங்கு, பறவையெனப்
பேரண்டப் பெருவெளியின்
     பரப்பையெலாம் ஆளுகின்ற,
சீராளா! என்றன் 
     சிந்தை நிறைந்தவனே!
யாராலும் காண 
     வியலாத வித்தகனே!
பாராளும் வேந்தே!
     பரம்பொருளே! இயேசு எனும் 
பேராலே உலகில் 
     புண்ணியனாய்ப் பிறந்து வந்து, 
வேறாரும் தரவியலா 
     ஈடேற்றம் எமக்களிக்கக்
கூராணி துளைக்கப்
     பாடேற்ற பலிபொருளே!
ஓராளாய்க் குறுக்கையில்
     உலகின் பவம்சுமந்து,
நீரோடு வடிந்தநின்
     உதிரத்தால் எமைமீட்ட
பேராண்மை மிக்க
     பெரியோனே! நானுனக்குச்
சீரோடு செலுத்துகிறேன் 
     செந்தமிழில் புகழ்வணக்கம்!
 
                                         - பொன்வக

கருத்துகள்